2021 மே 06, வியாழக்கிழமை

போர்த் தாக்கம் இன்னும் 30 வருடங்களுக்கு இருக்கும்: சி.வி

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தில் போரினால் ஏற்பட்ட மாசுக்களை கணக்கிலிட முடியாமல் இருக்கின்றது. முப்பது வருடப் போர், இன்னும் முப்பது வருடங்களுக்கு அதன் தாக்கத்தைத் தெரிவித்தே தீரும். ஆகவே வரும் முப்பது வருடங்களுக்கு நாம் சூழலை வளர்க்கும், போர்க்காலச் சுமைகளை அகற்றும், சுற்றாடலைச் சுத்தப்படுத்தும் காரியங்களில் எம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வது அவசியம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டிலான யாழ் மாவட்ட சுற்றாடல் முன்னோடிப் பாசறை வட்டுக் கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை (31) ஆரம்பமாகிய போது, அந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 'சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருக்கும் எமது குறிக்கோளை நடைமுறைப்படுத்த முதலில் நாங்கள் கண்டறிய வேண்டியவை இயற்கை வளங்களின் அழிவை ஏற்படுத்த காரணமாக அமையும் காரணிகளை. அதன்பின் அக்காரணிகளைத் தவிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்றார்.

'சுற்றாடலுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்த பின் அவற்றை தடுப்பதாயின் அல்லது தவிர்ப்பதாயின் அதற்கு மக்களின் முனைப்பான பங்கீட்டைப் பெற்றுக்கொள்ளல் அவசியம்.. மக்கள் மனம் வைத்தால்த்தான் மாசுறுதலை மாற்றலாம்.

இந்த சுற்றாடல் மாசடைதலானது உலக ரீதியில் தற்பொழுது பெரும் பிரச்சனையாக மாறிக்கொண்டிருகின்றது. பூகோள வெப்பநிலை, ஓசோன் படலம் சிதைவடைதல், மண் அரிப்படைதல், பனிமலை உருகுதல், கடல்மட்டம் உயர்வடைதல் போன்ற பல பிரச்சனைகளை சர்வதேச சமூகம் அலசி ஆராய்ந்து வருகிறது.

இவை எம்மையும் பாதிக்கப்போவது நிச்சயம். வருமுன் காப்பவன் போல் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இவை யாவற்றுக்கும் பொதுவானதொரு தீர்வு என்றால், மரங்களை வளர்த்தல்தான். அதேநேரம் பாரிய தொழிற்சாலைகளால், நிறுவனங்களால் வெளியேற்றப்படும் சகல விதமான நச்சு பொருட்களையும் இரசாயனங்களையும் சூழலை மாசுபடுத்தாத முறையில் அகற்றி அழித்தலோ மீள் சுழற்சிக்குட்படுத்தலோ எமது பாரிய பணியாக அமைகின்றன' எனவும் அவர் கூறினார்.

'சில காலத்துக்கு முன்னர் திண்மக் கழிவகற்றல் ஒரு பாரிய பிரச்சனையாக உலக நாடுகளில் இருந்து வந்தது. இப்பொழுது இயந்திரங்கள் ஊடாக அவற்றை மாற்றிப் பாவனைக்கான எரிசக்தி வாயுவாக மாற்றி வருகின்றார்கள். இங்கும் நாங்கள் இப்பேர்ப்பட்ட இயந்திரங்களை வரவழைக்க தயாராகிக் கொண்டிருக்கின்றோம். பண வசதி இல்லாவிட்டாலும் முயற்சித்து கொண்டிருக்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் பெருகி கிடந்த குப்பை, கூளங்களைத் திண்மக்கழிவுகளை போதியவாறு நாங்கள் அப்புறப்படுத்தாமையால்  இரண்டு உயிர்கள் அண்மையில் டெங்குக் காய்ச்சலால் பறிக்கப்பட்டன.

அந்த இருவரின் இறப்புத்தான் எங்களை மும்முரமாகத் திண்மக்கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் கவனம் செய்ய வைத்தது. சுயநல காரணங்களால், எமது கடமைகளை நாம் செய்யாது விடுவது நாளடைவில் எம்மையே பாதிக்கும். இதை மனதில் வைத்து சுற்றாடல் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுங்கள்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .