2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

சுன்னாகம் புகையிரத நிலையத்திலிருந்த 29 குடும்பங்கள் வேறிடங்களுக்கு மாற்றம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
 
வடபகுதிக்கான ரயில் பாதை அமைக்கும் முகமாக,  சுன்னாகம் ரயில்  நிலையத்தில் குடியிருந்த 29  குடும்பங்கள் அங்கிருந்து வேறிடங்களுக்கு நேற்றுமுன்  தினம் மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்த இம்மக்கள், சுன்னாகம் ரயில் நிலையக் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ரயில் நிலையத்தில் குடியிருக்கும் மக்களை வேறிடங்களுக்கு மாற்றுமாறும் ரயில்  பாதை அமைப்பதற்கான  பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரயில்  நிலையத்தில் தங்கியிருந்த குடும்பங்களில் சிலர் மீளக்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியான கட்டுவனுக்கு சென்றுள்ள அதேவேளை,  ஏனையவர்களில் 10 குடும்பங்கள் தமக்கென பல லட்சம் ரூபாய்கள் செலவில்  சொந்தக் காணிகளை கொள்வனவு செய்து சென்றுள்ளனர். இன்னும் ஒரு பகுதியினர் அளவெட்டி மற்றும் மல்லாகம் பகுதிகளிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கான வீடுகள் மற்றும் குழாய்க்கிணறுகளை அமைப்பதற்கு தேவையான  உதவிகளை அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் வழங்க முன்வந்துள்ளன. 

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் ரயில்;ப் பாதை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்போது, ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுன்னாகம் ரயில்;  நிலையப் பகுதியில் ரயில்ப் பாதை, ரயில்  நிலையம் ஆகியன அளவிடப்பட்டு மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

எனினும், யாழ்.  குடாநாட்டின் பல பகுதிகளிலும் ரயில்ப் பாதையை அண்டிய  குடியிருப்புகள், கடைகள், கட்டிடங்கள் ஆகியன அகற்றப்படாது இருக்கிறது.

கடந்த தை மாதம் ரயில்ப் பாதை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .