Editorial / 2020 ஜனவரி 03 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னைக்கான விமானப் போக்குவரத்துக்காக, பயணிகளிடம் இருந்து, விமான நிலைய வரியாகப் பெருந்தொகைப் பணம் அறவிடப்படுகின்றமை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு, அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவை கூட்டம், நேற்று (02), ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிலையில், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால், மேற்படி விடயம் அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்குப் பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரியாக, ஆறாயிரம் ரூபாயே அறவிடப்பட வேண்டிய நிலையில், 12 ஆயிரம் ரூபாய் அறவிடப்படுவதாக, அமைச்சர் டக்ளஸினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், “அடிப்படை வசதிகள்கூட முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில், கடந்த ஆட்சியாளர்களால் தேர்தலை நோக்காகக் கொண்டு, யாழ்ப்பாணம் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்துடன் ஒப்பிடுகின்ற போது, குறைந்த பறப்பு தூரத்தைக் கொண்ட சென்னைக்கான பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்படுவதற்கு ஐ.தே.மு - தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த கூட்டரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு எதிரான இந்தத் தீர்மானமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை, குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்பதற்கு, ஏகமனதாகத் தீர்மானித்ததாக, கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஜேர்மன் அரசாங்கத்தின் அனுசரணையில், கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட ஜேர்மன் ரெக் எனப்படும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நிலவிவருகின்ற குறைபாடுகள் தொடர்பான விடயங்களும், அமைச்சர் தேவானந்தாவினால் நேற்றைய தினம் அமைச்சரவையின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அது தொடர்பாகவும் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, குறித்த நிறுவனம் சிறப்பாகச் செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என, அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்தில், வடக்கு - கிழக்குப் பிரதேசத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகவும் அவை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அமைச்சரால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருவதாகவும், அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Jan 2026
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Jan 2026
28 Jan 2026