2020 நவம்பர் 28, சனிக்கிழமை

சதி வலைக்குள் இளையோர் சிக்கக்கூடாது: கஜதீபன்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ற.றஜீவன்


அரசின் சதி வலைக்குள் சிக்காது தமிழ் இளையோர் விழிப்புடன் செயற்பட வேண்டிய நேரம் இதுவென வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.

கைதடிமத்தி  குமரநகர் சனசமூக நிலைய நிறைமதி முன்பள்ளியின் விளையாட்டு விழா  சனிக்கிழமை (19) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'தமிழ் இளையோருக்கு வேலை, வசதி வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதான மாயைக்குள் அவர்களை தள்ளி, இன்றைய ஆளும் மத்திய அரசு இளையோரின் வறுமை நிலையை பயன்படுத்தி, மூளைச்சலவை செய்து வேறு சிவில் வேலை வாய்ப்புகளை வழங்காமல் இராணுவத்திற்கு உள்ளீர்க்கும் ஒரு நிகழ்ச்சி நிரலை திட்டமிட்ட ரீதியில் தமிழர் வாழும் பிரதேசமெங்கும் அரங்கேற்றி வருகிறது.

இந்த அரசின் சதி வலைக்குள் எந்தவொரு உண்மையான தமிழ் இளையோரும் எவ்விதத்திலும் சிக்கி விடாமல் விழிப்புடன் உண்மை நிலையை உணர்ந்து செயற்படவேண்டும்.

இந்த சனசமூக நிலைய திறப்பு விழாவில் கடந்த வருடம் நான் கலந்துகொண்டேன். அப்போது இந்த சனசமூக நிலையத்துக்கு  தென்மராட்சி மண்ணைச் சேர்ந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த ந.ரவிராஜ்  அடிக்கல் நாட்டியிருந்தமை பற்றி அறிந்தேன். அவருடன் இணைந்து  செயற்பட்ட இந்த ஊரின் முக்கியஸ்தர்கள் தான் இந்த சனசமூக நிலையத்தின் நிர்வாகிகளாக உள்ளனர். இந்நிலைமையானது இன்று இந்த முன்பள்ளியில் கல்வி கற்கும் சிறார்கள் நாளை நல்ல தேசிய உணர்வாளர்களாக, மொழிப்பற்றாளர்களாக வருவார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லாமல் செய்துவிட்டது.

ஆனால், இப்படியான சமூகங்களை திசை மாற்றி, சீரழித்து இப்படியான இனப்பற்றுள்ள, தமிழ்த் தேசியப்பற்றுள்ள இளையோரை  வேலைவாய்ப்பு எனும் மாயையின் கீழ் இனத்துக்கு எதிரானவர்களாக மாற்றும் செயற்பாடுகளை அரசாங்கம்  முடுக்கி விட்டுள்ளது.

ஆனால், தனிப்பட்ட தேவைகளை மனதிற்கொண்டு அல்லது அவர்களுடைய ஆசை வார்த்தைகளுக்கு எடுபட்டு யாராவது இவ்வாறான வரலாற்றுத் துரோகத்தை இழைப்பார்களேயானால் அவர்களை ஒருபொழுதும் எந்தவொரு தமிழ் மகனும் ஏற்றுக்கொள்ளவோ, மன்னிக்கவோ மாட்டான்.
ஆகவே எமது இளையோர் அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை விளங்கிக்கொள்வதுடன் ஏனைய நண்பர்களுக்கும் விளக்கி, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க ஒன்றுதிரளவேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில்  சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ஜெ.சிற்சபாநாதன், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிண்ஷக்ர், கைதடி சேதுகாவலர் வித்தியாலய அதிபர் இ.திருஞானசிவம், சனசமூக நிலைய செயலாளர் வ.ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--