2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

கணவனால் தீ வைக்கப்பட்ட பெண் மரணம்

Princiya Dixci   / 2017 மே 21 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம், நள்ளாந்தளுவ பிரதேசத்தில் கணவரினால் தீ வைக்கப்பட்ட முஹம்மது தமீம் சாமிலா (வயது 19) எனும் இளம் தாய் மரணமடைந்துள்ளாரெனவும் சடலம், பிரேத பரிசோதனையின் பின்னர் நாளை (22) உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் புத்தளம் தலைமையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன தெரிவித்தார்.

கடந்த 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்காக அனைவரும் சென்றிருந்த வேளையிலேயே, சந்தேகநபரான கணவன், தனது 19 வயதுடைய மனைவியைக் கட்டிவைத்து மனைவியின் உடம்பின் மீது மண்ணெண்ணெயை ஊற்றிப் பத்த வைத்துவிட்டு, அவ்விடத்தை விட்டும் அவர் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தீயில் எரிந்துகொண்டிருந்த குறித்த பெண்ணின் கூக்குரல் கேட்டு, அவ்விடத்துக்குச் சென்ற அயலவர்கள், பள்ளிக்கு தொழுகைக்காகச் சென்றவர்களின் உதவியுடன், கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்த பெண்ணை புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அத்துடன், வைத்தியசாலையில் கடந்த 15 நாட்களாக புத்தளம் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் குறித்த இளம் தாய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த  போதிலும், அவரது நிலைமை கவலைக்கிடமாக காணப்பட்டதுடன், புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த பெண்ணின் கணவரான சந்தேகநபர், பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்று, கடந்த 15 நாட்களாக தலைமறைவாகியிருப்பதாகத் தெரிவித்த புத்தளம் தலைமைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன, அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

ஜனாஸா, தில்லையடி முஸ்லிம் மையவாடியில் நாளை (22) நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, மரணமான இளம் தாய்க்கு ஏழு மாதக் கைக்குழந்தையொன்று இருப்பதுடன், அவர் நான்கு மாதக் கர்ப்பிணி எனவும் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .