2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

கற்பிட்டியை விவசாய பிரதேசமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை

Princiya Dixci   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேசத்தை விவசாய பிரதேசமாகப் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், இன்று புதன்கிழமை (13) தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடமேல் மாகாண சபையின் விவசாய மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நாளை வியாழக்கிழமை (14) நுரைச்சோலைப் பிரதேசத்தில் விசேட நடமாடும் சேவையொன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவையில் மத்திய மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆகியோருடன் மாகாண விவசாய மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

எனவே, கற்பிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைகளில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் குறித்த இரண்டு அமைச்சுக்களினாலும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த நடமாடும் சேவையில் கற்பிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளும், மீனவர்களும் தமது பிரச்சினைகளை மகஜர் மூலம் வருகை தரும் இரண்டு அமைச்சர்களிடம் தெரிவிக்க முடியும்.

அத்துடன், நாளைய தினம் கற்பிட்டிப் பிரதேசத்தை விவசாய பிரதேசமாகப் பிரகடனப்படுத்தவும் விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மிக நீண்ட காலமாகக் குறித்த பிரதேசத்தை விவசாயப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படாமையினால் இப்பிரதேச விவசாயிகள் உர மானியம் உள்ளிட்ட பல வரப்பிரசாதங்களை இழந்துள்ளனர்.

எனினும், மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்த பிரதேசம் விவசாய பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இதனால் விவசாயப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேச விவசாயிகள் பெற்றுக்கொள்ளும் அனைத்து வரப்பிரசாதங்களையும் கற்பிட்டிப் பிரதேச விவசாயிகளும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .