2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

'கிராமங்களுக்கான சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்கப்படும்'

Princiya Dixci   / 2016 மே 25 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களின் குடிநீர்ப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் சுத்தமான குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், நேற்று செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட முப்பது கிராமங்களுக்கு இந்த சுத்தமான குடிநீர் வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. 

குறித்த பிரதேச சபைக்குட்பட்ட கற்பிட்டிப் பகுதியில் நிலத்து நீரில் இரசாயப் பதார்த்தம் கலந்துள்ளiமையினால் அந்தப்பிரதேசத்தில் உள்ள நீர், குடிப்பதற்கு உகந்தது அல்ல என்றும் அதனால் மக்கள் புதிய நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை மிக நீண்ட காலமாக காணப்படுகின்றது. சுத்தமான குடிநீர் இல்லாததன் காரணமாக அந்தப் பிரதேச மக்களை உள ரீதியாகச் சோர்வடையச் செய்துள்ளது.

இந்தப் பிரதேசத்திலேயே அண்மையில் நீல நிறக்குழந்தையொன்றும் பிறந்துள்ளதும், இரசாயனப் பதார்த்தம் கலந்த குடிநீரே குறித்த குழந்தை நீலநிறத்தில் பிறந்தமைக்கான காரணம் எனவும் சொல்லப்பட்டது.

அத்துடன், கற்பிட்டி பிரதேசத்தில் வீடுகள் அருகருகில் உள்ளதால் கிணறுகளும், மலசல கூடங்களும் அருகருகே காணப்படுவதாலும் அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பல தொற்று நோய்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

அத்தோடு, கற்பிட்டிப் பிரதேசத்தில் அதிகமானோர் சிறுநீரக நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுத்தமான குடிநீரின்மையே இதற்கு காரணமாகும்.

அதுமாத்திரமின்றி, கற்பிட்டிப் பிரதேச சபைக்குட்பட்ட அக்கறைப்பற்றுப் பிரதேசத்திலும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்தப் பிரதேசத்தில் தும்புத் தொழிற்சாலைகள் அதிகமான இருப்பதனால் அந்தப் பகுதியில் குடிநீர் நிறம் மாறிப் போகின்றமையினால் அந்தப் பகுதியிலுள்ள மக்கள் குடிநீருக்கு பெரும் கஷ்டப்படுகின்றனர்.

எனவேதான், குறித்த இரு பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் மிக நீண்ட காலமாக முகம் கொடுத்து வருகின்ற சுத்தமான குடிநீருக்கான போராட்டத்துக்கு தற்போது முடிவு எட்டப்பட்டுள்ளது.

குறித்த இரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் 30 இற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் கவனத்துக்கு கொண்டுவந்தேன்.

எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஹக்கீம், கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட கற்பிட்டி மற்றும் அக்கறைப்பற்று ஆகிய இரு பிரதேசங்களையும் மையமாக வைத்து பாரிய குடிநீர் தாங்கிகள் மூலம் சுத்தமான குடிநீரை 'மெகா ஆரோ' எனும் திட்டத்தின் கீழ் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

கற்பிட்டி பிரதேசத்தில் ஒரு தாங்கியும், அக்கறைப்பற்று பிரதேசத்தில் மற்றுமொறு தாங்கியுமாக மொத்தமாக இரு பாரிய நீர்த் தாங்கிகள் அமைக்கப்படவுள்ளன. ஒரு தாங்கியில் சுமார் 13 அல்லது 24 கிராமங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க முடியும். எனவே, இரண்டு தாங்கிகள் மூலம் 30 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க முடியும் என் நம்புகிறோம்.

இதேவேளை, எனது வேண்டுகோளை ஏற்று உடனடியாகச் செயற்பட்ட அமைச்சர் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய நீர்வழங்கல் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று கடந்த வாரம் புத்தளத்துக்கு விஜயம் செய்தனர். 

இதன்போது கூடுதலான நீரைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நீர்வளம் பற்றி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் நீர் ஊற்று அதிகமாகவுள்ள இரு இடங்களும் அதிகாரிகளினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எந்த இரசாயனப் பதார்த்தம் கலந்த நீரையும் சுத்தமான குடிநீராக மாற்றி அதனை மக்கள் பாவனைக்கு வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .