2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

நிதி நிறுவன மோசடி சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

               alt     (எஸ். எம். மும்தாஜ்)

நிதிநிறுவனம் மற்றும் ஆதன நிறுவனம் ஒன்றை நடத்திச் சென்று மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய்களை மோசடி செய்த அந்நிறுவனத்தின் உரிமையாளரை சிலாபம் பதில் நீதவான் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வென்னப்புவ பிரதேசத்தில் நிதி மற்றும் ஆதன நிறுவனத்தின் உரிமையாளரான மாதம்பை மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த ஜயசிங்க ஆராச்சிலாகே அமில நிசாந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார்.

நேற்று இவருடன் கைது செய்யப்பட்டு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவருடைய மனைவியான சந்தி சுரேகா பெரேரா மற்றும் அந்நிறுவனத்தின் செயலாளராகக் கடமையாற்றிய வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த டப்ளிவ். ஏ. அயேசா லசந்தி ஆகியோரை சரீரப் பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சிலாபம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட நிதி மோசடி தொடர்பான 15 முறைப்பாடுகள் பற்றிய விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இந்த மோசடிகளுக்கு குறித்த இரண்டு பெண்களும் உடந்தையாக இருந்துள்ளததற்கான அறிக்கையை சிலாபம் பொலிஸ் நிலைய மோசடி விசாரணைப் பிரிவு, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதனையடுத்து குறித்த நபரின் மனைவியான சந்தி சுரேகாவுக்கு ஒவ்வொரு முறைப்பாட்டுக்கும் 10 இலட்சம் ரூபாய் வீதமான சரீரப் பிணையிலும் செயலாளராகக் கடமையாற்றிய அயேசா லசந்திக்கு ஒவ்வொரு வழக்கிற்கும் ஐந்து இலட்சம் ரூபாய்க்கான சரீரப் பிணையிலும் செல்ல உத்தரவிடப்பட்டது.

அத்துடன் இவர்களுடன் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட சந்தேக நபரின் 14 மற்றும் 9 வயதுகளையுடைய இரண்டு ஆண் பிள்ளைகளையும் பிள்ளைகளின் தாயிடம் ஒப்படைக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டார்.

சிலாபம் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ.வெதசிங்கவின் விஷேட ஆலோசனைக்கமைய இச்சந்தேக நபர்கள் மூவரும் இரண்டு பிள்ளைகளும் சிலாபம் பொலிஸ் நிலைய மோசடி விசாரணை பிரிவினரால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த சந்தேக நபர்கள் மூவர் உட்பட இரு பிள்ளைகளும் மொணராகலை பிரதேச ஹூலந்தாவ எனுமிடத்தில் வீடொன்றில் மறைந்திருந்த வேளையில் மொணராகலை பொலிஸ் நிலைய விஷேட படைப்பிரிவினர் மற்றும் மொணராகலை பிரிவு விஷேட குற்றத்தடுப்பு பிரினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

அமில நிசாந்த என்பவருக்கு எதிராக நேற்று முன்தினம் சிலாபம் மோசடி விசாரணைப் பிரிவிடம் ரூபாய் 75 இலட்சம் மற்றும் 65 இலட்சம் நிதி மோசடி சம்பந்தமாக இருவர் முறைப்பாடுகளைச் செய்துள்ளதுடன், இது சம்பந்தமாக இரகசிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவருக்கு எதிராக சிலாபம் பொலிஸ் நிலையத்தில் 29 முறைப்பாடுகளும், குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் 26 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்கள் அதிகூடிய வட்டியை வழங்குவதாகக் கூறி வென்னப்புவ பிரதேசத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

இதேவேளை இவர்கள் பலரிடம் காணி வழங்குவதாகக் கூறியும் பண மோசடியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. போலியான காணி உறுதியினைத் தயாரித்து ஒரே காணியை பலருக்கு விற்றுப் பணம் பெற்றுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதற்கான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்கியவர்கள் இருப்பின் உடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் மக்களைக் கேட்டுள்ளனர்.

சிலாபம் பொலிஸ் அத்தியட்சகர் சீ. ஈ. வெதசிங்கவின் விசேட அறிவுறுத்தலுக்கமைய சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குமார சந்தநாயகாவின் தலைமையில் சிலாபம் மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--