2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்

Editorial   / 2020 மே 14 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
சமூக இடைவெளியை உரிய முறையில் கடைப்பிடித்து, சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி புத்தளத்தில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென, புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சந்ரு பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புத்தளத்தில் அமலில் இருந்த ஊரடங்கு சட்டம் கடந்த 52 நாட்களுக்கு பின்னர் திங்கட்கிழமை (11) தளர்த்தப்பட்டது.

இந்த நிலையில் புத்தளம் நகர பாதுகாப்பு, எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக புத்தளம் தாய், சேய் மத்திய நிலையத்தில் நேற்று (13) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் முஹம்மது ஜனாப், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளைத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பிரேம திலக, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் என்.சுரேஸ் உட்பட புத்தளம் நகர சபை உறுப்பினர்கள், பெரிய பள்ளி நிர்வாகம் உறுப்பினர்கள், புத்தளம் நகர வர்த்தக சங்கத் தலைவர் உட்பட உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் பேசிய அவர், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸ் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது என்பது அர்த்தமல்ல. இலங்கையிலிருந்து கொரோனா வைரஸ் இன்னமும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எனவே, அதற்காக மனைவி, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் கடைத் தெருக்களுக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை.

தற்போது நோன்பு காலம் என்பதால் மக்கள் பெருநாளுக்கு ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக நகர் பகுதிக்கு வருகை தருகின்றமையும் அவதானிக்க முடிகிறது.

எனவே, பெருநாளுக்கு ஆடைகளை கொள்வனவு செய்ய குடும்பத்துடன் சமூகமளிக்கத் தேவையில்லை. 70 வயதுக்கு மேற்பட்டவர்களையும், சிறுவர்களையும் அழைத்து வருவதனை முழுமையாக தடுக்க வேண்டும் எனவும் குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் வருகை தந்து தேவையான ஆடைகளை கொள்வனவு செய்யுமாறு பள்ளிவாசல்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

அத்துடன், ஆடை கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக புத்தளம் நகர் பகுதிக்கு வருகைதருவோர்; முகக்கவசம் அணிந்துகொண்டு, சமூக இடைவெளியை பேணி தமது தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

அத்துடன், புடைவைக் கடைகளுக்கு வரும் மக்கள் கைகளை கழுவுவதற்கு உரிய வசதிகளை அந்தந்தக் கடை உரிமையாளர்கள் ஏற்பாடு செய்து வைக்க வேண்டும். 

ஆடைகளை கொள்வனவு செய்ய வரும் மக்கள் தாம் தெரிவு செய்யும் ஆடைகளை அணிந்து பார்ப்பதற்கு அனுமதிப்பதையும் உரிய வர்த்தகர்கள் தடைசெய்ய வேண்டும்.

பொதுமக்களும் இந்த நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--