2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தோட்டங்களின் தொழிலாளர்களை கௌரவிக்கும் விழா

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'சிறப்பான மக்கள் - சம்பிரதாயமான வெற்றியாளர்கள்' எனும் தொனிப்பொருளில் றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் கீழுள்ள பெருந்தோட்டங்களில் ணிபுரியும் தொழிலாளர்களை விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு முதன் முறையாக அண்மையில் நாவின்ன பகுதியில் அமைந்துள்ள குழுமத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குழுமத்தின் தலைவர் சேன யத்தெஹிகே அவர்கள் தலைமையேற்றிருந்தார்.

றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் முகாமைத்துவத்தின் கீழ் நாட்டின் முன்னணி மூன்று பெருந்தோட்டங்களான கேகாலை பெருந்தோட்டம், மஸ்கெலியா பெருந்தோட்டம் மற்றும் நமுனுகுல பெருந்தோட்டம் போன்றன இயங்குகின்றன. அத்துடன் றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் மூலம் கேகாலை, உடப்புஸ்சல்லாவை, ஊவா, பண்டாரவளை, களுத்தறை, காலி மற்றும் மாத்தறை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 58க்கும் அதிகமான பெருந்தோட்டங்கள் முகாமைத்துவம் செய்யப்படுகிறது. இந்த பெருந்தோட்டங்களில் தேயிலை, இறப்பர், பாம் எண்ணெய், தென்னை போன்றவற்றுடன், வாசனைத்திரவியங்களும், வாழை மற்றும் றம்புட்டான் போன்ற பழச் செய்கையும் இடம்பெறுகின்றன.

றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இந்த 3 பெருந்தோட்டங்களைச் சேர்ந்த ஊழியர்களும் தொழிலாளர்களும் கடந்த ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்தமையை கௌரவிக்கும் வகையில் 'சிறப்பான மக்கள் - சம்பிரதாயமான வெற்றியாளர்கள்' எனும் விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த பெருந்தோட்டம், அதிகூடிய வருமானம் பெற்ற தொழிலாளி, சிறந்த அடிப்படை வளங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல், சிறந்த விவசாய செயற்பாடு, விரய முகாமைத்துவம், தொழிலாளர் முகாமைத்துவம், சிக்கனமான செயற்பாடு, உற்பத்தி அதிகரிப்பு போன்ற ஒன்பது விருதுகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் சிறந்த பெருந்தோட்டமாக நமுனுகுல பெருந்தோட்டத்தின் அலதுவ எஸ்டேட் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் பிரான்ஸ்விக் எஸ்டேட் மற்றும் கேகாலை பெருந்தோட்டத்தின் ஈதெல்ல எஸ்டேட்டும் பெற்றன.

இந்த விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவதற்கு பிரதான காரணங்களாக தேசிய பொருளாதாரத்துக்கு இந்த மூன்று பெருந்தோட்டங்களும் பெருமளவான பங்களிப்பு வழங்கியிருந்தமை, விரய முகாமைத்துவம், உற்பத்தி அதிகரிப்பு, சிறந்த முகாமைத்துவம் மற்றும் ஒவ்வொரு பெருந்தோட்ட அதிகாரியின் பங்களிப்புடனும் நிறுவனம் பெற்ற இலாபம் ஆகியன அமைந்திருந்தன.

இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தியின் 8 வீதமான பங்களிப்பை றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் மூன்று பெருந்தோட்டங்கள் வழங்குகின்றன. அத்துடன் நமுனுகுல மற்றும் கேகாலை பெருந்தோட்டங்களின் இறப்பர் உற்பத்தியானது மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதத்தை வகிக்கின்றது. மேலும் நமுனுகுல பெருந்தோட்டத்தின் பாம் எண்ணெய் உற்பத்தி மொத்த தேசிய உற்பத்தியில் 30 வீதத்தை வகிக்கிறது. இலங்கையின் மிகப்பெரும் பெருந்தோட்ட கம்பனியாக றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம் திகழ்வதுடன் 50000 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட குழுமத்தின் தலைவர் சேன யத்தெஹிகே கருத்து தெரிவிக்கையில், 'எமது நிறுவனம் இலங்கைக்கு அந்நியச் செலவாணியை பெற்றுத்தருவது மட்டுமல்லாமல், எமது குழுமத்தின் ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ள ஒரு நிறுவனமாகும். இவ்வாறு எமது நிறுவனத்தின் வளர்ச்சியில் அயராது உழைக்கும் எமது ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களை கௌரவிப்பது எமது பிரதான கடமையாகும்' என்றார்.
 
இந்த விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் பெருந்தோட்டத்துறை சார்ந்த நிபுணர்களும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நமுனுகுல பிளான்டேஷனின் எலதுவ தோட்ட அத்தியட்சகர் நிசங்க செனவிரட்னவிடம், ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் கலாநதி சேன யெதெஹிகே சவால் கிண்ணத்தை கையளிப்பதை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .