2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஆர்வம்

A.P.Mathan   / 2011 ஜூன் 12 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வார பங்குச் சந்தை நிலைவரம்

(ச.சேகர்)

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (10.06.2011) பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7241.92 ஆகவும், மிலங்கா விலைச் சுட்டெண் 6775.80 ஆகவும் அமைந்திருந்தது.

தொடர்ச்சியாக கடந்த இரண்டு வாரங்களின் கொடுக்கல் வாங்கல்களை ஆராயும் போது, இறங்குமுகமாக பிரதான இரண்டு சுட்டிகளும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலைமை குறித்து ஆஷா பிலிப் செக்கியூரிட்டீஸ் பங்கு முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளர் சந்துரு - தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில், 'தற்போது ரூபாவின் பெறுமதி அதிகரித்து காணப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை டொலருக்கு நிகரான ரூபாவின் நாணயமாற்று வீதம் 109.35 ஆக காணப்பட்டது. டொலரின் பெறுமதி சற்று குறைவடைந்து வருகிறது. இதற்கு காரணம் இறக்குமதியில் ஈடுபடும் வர்த்தகர்கள் தமது இறக்குமதி நடவடிக்கைகளை பெருமளவில் குறைத்துள்ளனர். இதனால் டொலருக்கான கேள்வி குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பயனை அனுபவிக்கும் வகையில் வெளிநாட்டு பங்குதாரர்கள் தமது பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் நாணயமாற்று இலாபத்தை அவர்கள் பெற்றுவருகின்றனர். பிரதான சுட்டிகள் இதன் காரணமாகவே இறங்குமுகமாக காணப்படுகின்றன. ஆயினும் மொத்த பங்குபுரள்வை கருதும் போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது'.

'உள்நாட்டு கொள்வனவாளர்களை பொறுத்தமட்டில் சிறிய பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்வதில் அதிகளவு அக்கறை காட்டியிருந்தனர். புளு டயமண்ட், பான் ஏசியா பவர், ஃபிரீ லங்கா கெப்பிடல் ஹோல்டிங்ஸ் போன்ற பங்குகளை கொள்வனவு செய்வதில் அதிகளவு ஆர்வம் நிலவியது. அத்துடன், கடந்த வியாழக்கிழமை டிஸ்டிலரிஸ் தமது வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்திருந்ததன் பின்னர், அதன் பங்கு விலையில் குறிப்பிடத்தக்களவு ஏற்றம் நிகழ்ந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்தது. மேலும், புளு சிப் நிறுவன பங்குகளை பொறுத்தமட்டில் எயிட்கன் ஸ்பென்ஸ் பங்குகள் கொள்வனவில் அதிகளவு ஆர்வம் காணப்பட்டதுடன், ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் பங்குகளும் கைமாற ஆரம்பித்திருந்தது' என்றார்.

புதிய ஆரம்ப பொது பங்கு வழங்கல் பற்றி கூறுகையில் 'எதிர்வரும் 21ஆம் திகதி வலிபெல்1 மற்றும் 23ஆம் திகதி பிரவுண் இன்வெஸ்ட்மன்ட் பங்கு வழங்கல்கள் நடைபெறவுள்ளன. இவற்றுக்கும் பெருமளவு வரவேற்பும் கேள்வியும் நிலவும் என நாம் எதிர்பார்க்கிறோம். இவற்றை கொள்வனவு செய்யும் வகையில், பங்குதாரர்கள் எதிர்வரும் நாட்களில் தம்மிடமுள்ள பங்குகளை விற்பனை செய்யக்கூடும். அடுத்தவாரமும் தற்போது நிலவும் சந்தை நிலைவரமே தொடரும் என நாம் எதிர்பார்க்கிறோம்' என்றார்.  

ஜூன் 06ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 2,108,767,609 அமைந்திருந்தது. இதில் உள்நாட்டு பங்காளர்களின் கொடுக்கல் வாங்கல் பெறுமதியாக ரூ.1,945,249,098 மற்றும் வெளிநாட்டு பங்காளர்களின் கொடுக்கல் வாங்கல் பெறுமதியாக ரூ.79,674,534 பதிவாகியிருந்தது. 

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் கலாமாசூ, சிங்கர் ஐன்டி, ஹரிஸ்சந்திரா, பிளு டயமன்ட்ஸ், மற்றும் பான் ஏசியன் பவர் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

பான் ஏசியா, ஹன்டர்ஸ், மேர்க் சிப்பிங், செலிங்கோ இன்ஸ் மற்றும் நேஷன் லங்கா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தற்போதைய பங்குச்சந்தையின் நிலைமையின் படி பங்குகளை கொள்வனவு செய்வதற்கு உகந்த காலப்பகுதியாக கருதப்படுகிறது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X