Super User / 2011 ஜனவரி 19 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் ஆடைக் கைத்தொழில் துறையின் மூலம் 2015 ஆம் ஆண்டளவில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டும் நோக்கில் புதிய துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆடைக் கைத்தொழில் துறை திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில்,
'இலங்கையின் ஆடைக் கைத்தொழில் உலகத் தரம்மிக்கதான தயாரிப்புகளை சர்வதேச முத்திரையுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இது எப்பொழுதும் தொழில்சார் விழுமிய நடைமுறைகளையும் சுற்றாடல் தராதரங்களையும் கடைப்பிடித்து வருகின்றது. இக் கைத்தொழிலானது 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டித்தருமளவு பெரியதொரு கைத்தொழிலாகும்.
இதற்கு மேலதிக வசதிகளை வழங்குவதற்காக உட்துறைமுக வர்த்தக ஈடுபாட்டு இறக்குமதிகள், பதனிடல் மற்றும் மீள் ஏற்றுமதிகள், கப்பலேற்றல் வியாபாரங்கள் என்பவற்றினை ஆடைக்கைத்தொழில் ஊக்குவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். உயர் பெறுமதி சேர்க்கப்பட்ட செயற்பாடுகளுடன் தொடர்பான புடவை, ஆடை மற்றும் தோற்பொருள் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், புடவை, தோற்பொருள், பாதணிகள் மற்றும் பைகள் தயாரிப்புக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இறக்குமதி தீர்வை மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.
முகாமைத்துவம், நிதி, வழங்கல் மற்றும் விலைப்பட்டியலிடல் செயற்பாடுகளுக்கான பிரதான கொள்வனவாளர்கள் தமது தலைமையகங்களை இலங்கையில் தாபிப்பதை கவர்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்தகைய செயற்பாடுகளின் வெளிநாட்டுச் செலவாணி வருமானத்தினை வருமான வரியிலிருந்து விலக்களிப்பதற்கு நான் முன்மொழிகிறேன். இச்செயன்முறைகளை ஊக்குவிக்கும் வகையில் செலாவணிக் கட்டுப்பாட்டுத் தேவைப்பாடுகள் மற்றும் சுங்க நடைமுறைகள் என்பன இலகுவாக்கப்படும்' என தெரிவித்திருந்தார்.
மேலும், மஹிந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி கொள்கைவரைவுத்திட்டத்துக்கு அமைவாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் 'இலங்கை, ஆசியாவின் சொர்க்கபுரி' திட்டமும் ஆடைக் கைத்தொழில் துறை முன்னேற்றத்துக்கு வழிகோலியுள்ளது.
2009 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த தேசிய ஏற்றுமதி வருமானத்தில் 46 வீதமான 3262 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆடைக் கைத்தொழில் துறையின் மூலம் பெற்றுக் கொள்ள முடிந்ததாக தேசிய கொள்கை வரைவுத்திட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் பெருமளவு பங்கை வகிப்பது ஆடைக் கைத்தொழில் துறை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், உள்நாட்டு ஆடைக்கைத்தொழில் முயற்சியாளர்கள் புதிய தயாரிப்புகளை வடிவமைப்பதன் மூலம் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டிகரமான சூழ்நிலையை சமாளிக்க முடியுமென தேசிய கொள்கை வரைவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் மேலும் மூன்று புதிய ஆடைக் கைத்தொழில் பிராந்தியங்கள் உருவாக்கப்படும். புதிய தயாரிப்புகளை வடிவமைத்தல் மற்றும் புதிய உற்பத்திப் பொருகள் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பில் கூடிய அக்கறை செலுத்தப்படும்' என தேசிய கொள்கை வரைவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்துறையானது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் முக்கிய ஆடை தயாரிப்பாளராக தடம் பதித்துள்ளது.
ஜாஃப் (JAAF) ) அமைப்பின் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில், 'பாரம்பரிய வர்த்தக நடவடிக்கைகளை கைக்கொள்வதிலும், ஆடைக் கைத்தொழில் துறையில் முன்னணி ஈடுபாடுடையவர்கள் எனும் வiயிலும், உலகின் முதற்தர சூழல் பாதுகாப்பான தொழிற்சாலைகளையும் கொண்டமைந்தமை போன்றன இந்த துறையின் வளர்ச்சியில் நாம் எந்தளவு அக்கறை கொண்டுள்ளோம் என்பதற்கு சான்று பகர்கின்றன' என்றார்
இலங்கையின் ஆடைக் கைத்தொழில்துறையானது சர்வதேச கொள்வனவாளர்களுக்கு பிரதான மூன்று அனுகூலங்களை வழங்குகிறது.
முதலாவதாக, அதிவேகமான விநியோகம் அமைந்துள்ளது. இதற்கு; உலகில் இலங்கையின் அமைவிடம் காரணமாக அமைந்துள்ளது. உற்பத்தியிலிருந்து விநியோகம் வரை இலங்கை ஆடைக் கைத்தொழில்துறையானது நேரத்தை குறைப்பதற்கான அணுகுமுறைகளை கையாண்டு வருகிறது.
இரண்டாவது அனுகூலமாக, கேள்விக்கு ஏற்ப பாரிய கொள்ளளவுகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்வனவாளர்களுக்கு வழங்கக்கூடிய திறன் காணப்படுகிறது. கடந்த நான்கு தசாப்த காலமாக உலகத்தரம்மிக்க தயாரிப்புகளை கொள்வனவாளர்களுக்கு இலங்கை ஆடைக் கைத்தொழில் துறை வழங்கி வருகிறது.
மூன்றாவது அனுகூலமாக, இலங்கையில் காணப்படும் சாதகமான வர்த்தக கொள்கைகளும் முதலீட்டாளர் சூழ்நிலையுமாகும். தெற்காசியாவில் மிகவும் கட்டுப்பாடுகள் குறைந்த பொருளாதார நிலை காணப்படும் நாடாக இலங்கை கணிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் மற்றும் முதலீட்டு உறுதிப்படுத்தல் உடன்படிக்கைகள் போன்றன வெளிநாட்டு முதலீட்டாளர்களை பெருமளவில் கவரும் வகையில் அமைந்துள்ளன என ஜாஃப் (JAAF) ) அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஆடைக் கைத்தொழில் துறையின் முன்னேற்றம் குறித்து இவ்வாண்டு முதல் முன்னெடுக்கப்படவுள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம் 2015 ஆம் ஆண்டளவில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருமானமாக பெற்றுக் கொள்ள முடியுமென தாம் எதிர்பார்ப்பதாக ஜாஃப் அமைப்பு எதிர்வு கூறியுள்ளது.
7 minute ago
11 minute ago
29 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
29 minute ago
29 minute ago