2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

எதிர்கால கல்வி முறைக்கு மொபைல் கற்றல் முறை பொருத்தமானது: ஜயோமி லொகுலியன

A.P.Mathan   / 2013 ஜூலை 30 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
இலங்கையில் நடைமுறையிலுள்ள கல்வித் திட்டம் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்த வண்ணமுள்ளன. பாட புத்தகங்கள் முதல் கொண்டு எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதி தேர்வுகள் வரையில் பிழைகளும், குளறுபடிகளும் இடம்பெறுவதாக கடந்த காலங்களில் சிக்கல் நிலைகள் தோன்றியிருந்தன. இதேவேளை இன்றை தலைமுறையினர் மத்தியில், தற்போது நாம் பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயிலும் விடயங்கள், நடைமுறை வாழ்க்கைக்கு அல்லது தொழில் நிலையில் பொருத்தமானதாக அமைந்திருக்கவில்லை எனும் பொதுவான கருத்தும் காணப்படுகிறது. 
 
காலத்துக்கேற்ற மாற்றங்கள் என்பது ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படுகிறது. சுமார் இரண்டு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் புகழ்பெற்று புரட்சியை ஏற்படுத்திய தகவல் தொழில்நுட்பத்துறையிலும் மாற்றங்கள் சர்வசாதாரணமாக இடம்பெற்றுவருகின்றன. கல்வித்துறையில் இந்த நவீன தகவல் தொழி்ல்நுட்பத்தின் மூலமாக எவ்வாறான புரட்சி ஏற்படுத்த முடியும் என்பதையும், அவ்வாறான ஏதேனும் முயற்சிகள் பாடசாலை கல்வி விதானத்துக்கு அப்பாற்பட்டு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிந்து கொள்ள இலங்கையின் விருது வென்ற தகவல் தொழில்நுட்ப மற்றும் மொபைல் தீர்வுகளை வழங்கும் நிறுவனமான zMessenger இன் இணை தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜயோமி லொகுலியன அவர்களை சந்தித்து கேட்ட போது, 

 
”உண்மையில் இலங்கையில் தற்போது ஆங்கில மொழி என்பது பரவலாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. தொழில் நேர்காணல்கள், தொழில் நிலை பதவி உயர்வகள், தன்நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் சமுதாயத்தில் சுய ஆளுமையை வளர்த்துக் கொள்ளல் போன்ற அனைத்துவிதமாக சூழல்-பொருளாதாரநிலை சார்ந்த விடயங்களுக்கும் ஆங்கில மொழியில் சரளமாக கருமமாற்றக்கூடிய ஆற்றல் இருப்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
 
இதன் காரணமாக ஆங்கில மொழியை பயில்வதற்காக பெருமளவானோர் அதிகளவான முதலீட்டை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு நாம் பெரும்பாலான மக்களை சென்றடையும் வகையில் மொபைல் கற்றல் முறையை கையடக்க தொலைபேசிகளின் ஊடாக அறிமுகம் செய்ய தீர்மானித்தோம். எமது இந்த முயற்சிக்கு பங்காளர்களாக பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனம் எம்முடன் இணைந்து கொண்டது. 
 
இந்த கற்றல் முறையின் மூலம் நாம் மேற்கொள்ள தீர்மானித்தது என்னவெனில், பாரம்பரிய வகுப்பறை கற்றல் முறையிலிருந்து அப்பாற்பட்டு, ஒருநபரின் வேலைப்பளு நிறைந்த காலப்பகுதியிலும் கூட, சுயமாக மிகவும் இலகுவாக ஆங்கில மொழியை எங்கிருந்தும் கற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்த தீர்மானித்தோம். இதற்கு கையடக்க தொலைபேசியை நாம் ஊடகமாக தெரிவு செய்தோம். ஏனெனில் கையடக்க தொலைபேசி பாவனை என்பது இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் மிகவும் பரந்து காணப்படுகிறது. 
 
அத்துடன், இந்த முறையின் மூலம் பாவனையாளருக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் தமக்கு அவசியமான பாடவிதானத்தை பயிலக்கூடிய வாய்ப்பும் உள்ளது. இந்த திட்டத்தை நாம் 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தடவையாக அறிமுகம் செய்திருந்தோம். இந்த திட்டத்துக்கு ”பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஆங்கிலம் பயிலுங்கள்“ என பெயரிடப்பட்டிருந்தது.
 
இந்த திட்டத்தில் ஆங்கிலம் பயில்வதற்கு மூன்று நிலைகள் காணப்படுகின்றன. எந்த வகையிலான கையடக்க தொலைபேசியினூடாகவும் எஸ்எம்எஸ், ஒலிப்பதிவுகள் மற்றும் வீடியோ முறையில் ஆங்கில இலக்கணம், சொற்பதம், சொற்களுக்கான விளக்கங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளக்கூடிய வசதி பயிலுனருக்கு வழங்கப்படுகிறது. இந்த சேவைக்காக பயிலுனர் ஒருவர் தம்மை பதிவு செய்து கொண்டவுடன், அவர்களுக்கு தமக்கு விருப்பமான நிலைகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். ஆரம்ப நிலை, இடைநிலை மற்றும் உயர் நிலை என மூன்று நிலைகளில் இந்த கற்கைகள் வழங்கப்படுகின்றன. இந்த தெரிவுகளை மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு தமது சுயவிருப்பத்தில் மொழிமூலங்களை தெரிவு செய்து கொள்ளலாம். 
 
பல அனுகூலங்களை இந்த திட்டம் கொண்டிருந்த போதிலும், பாரம்பரிய வகுப்பறை கல்வி முறையில் காணப்படும் சில அனுகூலங்கள் இந்த முறையில் இல்லை. அதாவது, நேரடியாக தொடர்பாடல்களை ஏற்படுத்தி கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, அது பெருமளவு செயற்திறன் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஆயினும், இந்த நிலையை அணுகும் வகையில், அழைப்பொன்றை மேற்கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தமக்குரிய சந்தேகங்களை நேரடியாக நிவர்த்தி செய்துக் கொள்ளக்கூடிய தீர்வு முறை ஒன்று குறித்து நாம் தற்போது செயற்பட்டு வருகிறோம். 
 
இந்த சேவை தற்போது டயலொக், மொபிடெல், எடிசலாட் மற்றும் ஹட்ச் போன்ற வலையமைப்புகளின் ஊடாக வழங்கப்படுகிறது. இந்த சேவைக்காக பதிவு செய்து கொண்டுள்ளவர்கள் கொழும்புக்கு வெளியே அமைந்துள்ள வவுனியா, யாழ்ப்பாணம், பதுளை, அம்பாறை, திருகோணமலை, பொலன்நறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். இந்த வாடிக்கையாளர்களிடமிருந்து எமக்கு கிடைத்துள்ள வரவேற்பின் மூலம், இந்த முறையிலான கல்வி திட்டத்துக்கு சிறந்த வரவேற்பும் கேள்வியும் காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி முறையின் மூலம் பயிலுனர் ஒருவருக்கு ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்ப்புகளும் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக பயிலுனருக்கும் மிகவும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
 
கையடக்க தொலைபேசி பாவனை இலங்கையில் 80வீதத்துக்கும் அதிகமானதாக காணப்படும் நிலையில், இந்த ஊடகத்தின் மூலம் கற்றல் கற்பித்தல் சேவையை வழங்கும் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் மிகவும்  பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்பது இந்த நேர்காணலில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X