Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ச. சந்திரசேகர் / 2020 ஜூன் 06 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, ஆறில் ஓர் இளைஞர், தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாகவும் எஞ்சியுள்ள பணிபுரியும் இளைஞர்களின் பணிபுரியும் நேரம், சுமார் 23 சதவீதத்தால் குறைந்துள்ளதாகவும் சர்வதேச தொழில் ஸ்தாபனம் (ILO) அறிவித்துள்ளது.
ILO Monitor: COVID-19 and the world of work: இன் நான்காம் பிரசுரம், அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. தொற்றுப் பரவல் காரணமாக, இளைஞர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் முதல், அதிகரித்து வரும் தொழில் வாய்ப்பின்மைப் பிரச்சினை காரணமாக, இளைஞர்களை விட, யுவதிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொற்றுப் பரவலானது, இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் அதிகளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் தொழில் வாய்ப்பை, இல்லாமல் செய்வது மாத்திரமன்றி, கல்வி அதனுடன் தொடர்புடைய பயிற்சிச் செயற்பாடுகள் போன்றவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தொழிற்சந்தையில் பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்குப் பெரும் தடையாக அமைந்துள்ளதுடன், ஒரு தொழிலிலிருந்து மற்றுமொரு தொழிலுக்கு மாற எதிர்பார்ப்பவர்களுக்கும் பெரும் தடையாக அமைந்துள்ளதாக, சர்வதேச தொழில் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டில், காணப்பட்ட 13.6 சதவீத தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை என்பது, மிகவும் உயர்ந்த பெறுமதியாகும். உலகளாவிய ரீதியில் சுமார் 267 மில்லியன் இளைஞர்கள் எவ்விதமான தொழில் வாய்ப்பையும் கல்வியும் பயிற்சியையும் (NEET) பெற்றிருக்கவில்லை. தொழிலில் ஈடுபட்ட 15-24 வயதுக்கு உட்பட்டவர்களில், பெருமளவானோர் குறைந்த சம்பளம் வழங்கும் தொழில், முறைசாராத் தொழிலில் ஈடுபடுவோராக அல்லது, புலம்பெயர்ந்து பணியாற்றுவோராகக் காணப்பட்டனர்.
''கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, பொருளாதார ரீதியில் இளம் வயதினர், குறிப்பாக யுவதிகள், அதிகளவு பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். ஏனைய குழுக்களுடன் ஒப்பிடுகையில், இவர்களில் இந்தத் தாக்கம் அதிகம் உணரப்பட்டுள்ளது. இவர்களின் நிலையை மேம்படுத்த, நாம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்காவிடின், இந்த வைரஸ் தாக்கத்தின் விளைவுகள், எம்மத்தில் பல காலத்துக்குக் காணப்படும். அவர்களின் திறமைகள், திறன் ஆகியன, போதியளவு வாய்ப்பின்மை, திறன் இன்மை காரணமாக ஓரங்கட்டப்பட்டால், எமது எதிர்காலத்தை அது மோசமாகப் பாதிக்கும். அத்துடன், கொவிட்-19இன் பின்னரான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலும் கஷ்டத்தை ஏற்படுத்தும்'' என, சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கய் ரயிடர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்த நாடுகளில், பரந்தவாரியான தொழிலுக்கும் பயிற்சிக்கும் உத்தரவாதமளிப்பு நிகழ்ச்சிகள், குறைந்த, நடுத்தரளவு வருமானமீட்டும் பகுதிகளில், தொழில் வாய்ப்பளிக்கும் நிகழ்ச்சிகள் உத்தரவாதங்கள் ஊடாக அவசர, பாரியளவு, இலக்கு வைக்கப்பட்ட கொள்கைகளினூடான இளைஞர்களுக்கு உதவிகளை வழங்கல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தக் கண்காணிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசோதனைகள், இனங்காணல்கள் பயனளித்துள்ளன
நான்காம் பிரசுரத்தில், பணிக்கு மீளத்திரும்புவதற்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டிருந்தது. கொவிட்-19 தொற்றுத் தொடர்பில், கடுமையான பரிசோதனைகள், இனங்காணல்கள் என்பன முழுமையான முடக்கல் அல்லது மூடி வைத்திருக்கும் செயற்பாடுகளுக்குப் பதிலாக குறைந்தளவில் தொழில் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
கடுமையான பரிசோதனை, கண்காணிப்புப் பொறிமுறைகள் காணப்படும் நாடுகளில், பணியாற்றும் நேரத்தின் வீழ்ச்சி என்பது 50 சதவீதத்தால் குறைந்துள்ளது. இதற்கு, மூன்று பிரதான காரணிகள் காணப்படுகின்றன. பரிசோதனைகள், இனங்காணல்கள் என்பது, கடுமையான முடக்கல் நிலையைத் தணிக்கின்றது. பொது மக்கள் மத்தியில் நம்பிக்கையை மேம்படுத்துவதுடன், தொழில் நிலையை ஊக்குவிக்க உதவியாக அமைந்துள்ளது.
பணியிடத்தில் செயற்பாடுகள், தடங்கலைக் குறைத்துக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது. மேலும், பரிசோதனை, இனங்காணல் ஊடாகவும் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இவை தற்காலிகமானவையாக அமைந்திருந்தாலும், இவற்றை இளைஞர்கள், இதர முன்னுரிமைக் குழுக்களை இலக்காகக் கொண்டு வழங்க முடியும்.
தரவுகளின் பிரத்தியேகத் தன்மையின் முக்கியத்துவம் தொடர்பில், இந்த கண்காணிப்புப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குச் செலவு அதிகமாகக் காணப்பட்ட போதிலும், பரிசோதனை, இனங்காணல் அனுகூல விகிதத்துடன் ஒப்பிடுகையில், இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிடர் தெரிவிக்கையில், ''தொழில் வாய்ப்புடன்கூடிய மீட்சியை ஏற்படுத்துவதனூடாக, நிலைபேறாண்மை, சமத்துவத்தை ஏற்படுத்தி, மக்களையும் நிறுவனங்களையும் இயலுமானவரை விரைவில் பாதுகாப்பான சூழலில், மீளஇயங்கச் செய்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கும். அச்சம், இடரைக் குறைத்தல், எமது பொருளாதாரங்கள், சமூகளைத் துரிதமாக மீள் எழுச்சி பெறச் செய்வதற்குப் பரிசோதனை, இனங்காணல் என்பது கொள்கைத் திட்டத்தில் முக்கிய அங்கமாக அமைந்திருக்கலாம்'' என்றார்.
2019ஆம் ஆண்டின், நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2020ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளுக்கான பணியாற்றும் நேரங்களில் பதிவாகியிருந்த வீழ்ச்சியையும், இந்தக் கண்காணிப்புப் பிரசுரம் வெளிப்படுத்தி இருந்தது.
2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சுமார் 4.8% ஆன பணியாற்றும் நேரம் இழக்கப்பட்டிருந்தது (இது வாரமொன்றில், 48 மணித்தியால வேலை நேரம் எனக் கருதினால், சுமார் 135 மில்லியன் முழு நேரத் தொழில்களுக்கு நிகரானதாகும்). இது, இந்தக் கண்காணிப்புப் பிரசுரத்தின் மூன்றாம் வெளியீட்டின் பின்னர், சுமார் ஏழு மில்லியன் தொழில்கள் இழப்பு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இரண்டாம் காலாண்டில் மதிப்பிடப்பட்ட தொழில் இழப்புகள், மாறாமல் 305 மில்லியனாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்திய ரீதியில் கருதினால், அமெரிக்காவில் (13.1%) ஆகவும் ஐரோப்பா, மத்திய ஆசியாவில் (12.9%) ஆகவும் இரண்டாம் காலாண்டில் பணியாற்றிய நேரத்தில் உயர்ந்தளவு வீழ்ச்சியை பதிவு செய்திருந்தன.
சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின், நான்கு பிரதான கொள்கைகளான, பொருளாதாரம், தொழிலை ஊக்குவித்தல், வியாபாரங்கள், தொழில்கள் மற்றும் வருமானங்களுக்கு உதவுதல், பணியிடத்தில் ஊழியர்களைப் பாதுகாத்தல், தீர்வுகளுக்குச் சமூக கலந்துரையாடல்களில் தங்கியிருத்தல் ஆகியவற்றின் பிரகாரம், ஊழியர்கள், வியாபாரங்களுக்கு உதவிகளை வழங்க, அவசர, உடனடிச் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, இந்தக் கண்காணிப்புப் பிரசுரம் வலியுறுத்தியுள்ளது.
10 minute ago
10 minute ago
13 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
10 minute ago
13 minute ago
32 minute ago