2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

பொறியியலாளர்களின் மென் திறன் ஆற்றல், தலைமைத்துவத்தை மேம்படுத்த INSEE சீமெந்து

Editorial   / 2020 ஜூலை 29 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையைச் சேர்ந்த 200க்கும் அதிகமான சிரேஷ்ட பொறியியலாளர்களின் மென் திறன் ஆற்றல், தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக, தொழில்நுட்ப அமர்வுகளை முன்னெடுப்பதற்கு, இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு ஸ்கூல் ஒஃவ் பிஸ்னஸ் அன்ட் மனேஜ்மன்ட் ஆகியவற்றுடன் INSEE சீமெந்து புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரச-தனியார் பங்காண்மை உடன்படிக்கையில், INSEE சீமெந்தின் கூட்டாண்மை அலகான – Siam City சீமெந்து (லங்கா) லிமிடெட், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கொழும்பு ஸ்கூல் ஒஃவ் பிஸ்னஸ் அன்ட் மனேஜ்மன்ட் ஆகியன கைச்சாத்திட்டிருந்தன. வீதி, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பேமசிறியின் மேற்பார்வையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் சி.பி. அஹுலுவகேயின் பிரசன்னத்தில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் கமல் அமரவீர, கொழும்பு ஸ்கூல் ஒஃவ் பிஸ்னஸ் அன்ட் மனேஜ்மன்ட் தலைமை அதிகாரி பேராசிரியர். ரஞ்சித் பண்டார, INSEE சீமெந்தின் விற்பனை, சந்தைப்படுத்தல், புத்தாக்க செயற்பாடுகளுக்கான நிறைவேற்று உப தலைவர் ஜான் குனிக் மற்றும் INSEE கொங்கிறீற், தொழிற்துறைசார் விற்பனைகளுக்கான பொது முகாமையாளர் நந்தன அமுனுதுடுவ ஆகியோர் கைச்சாத்திட்டனர்.   

இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, இலங்கையின் நிர்மாணத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்கின்றது. இதற்காக பொறியியலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், மேசன்மார் மற்றும் மாணவர்களுக்கு திறன் விருத்தி மற்றும் அறிவுப் பகிர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வலுவூட்டிய வண்ணமுள்ளது.

INSEE சீமெந்தின் விற்பனை, சந்தைப்படுத்தல், புத்தாக்க செயற்பாடுகளுக்கான நிறைவேற்று உப தலைவர் ஜான் குனிக் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கை முழுவதிலும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி முன்னெடுக்கப்படும் நிலையில், ஐந்து தசாப்த காலப்பகுதிக்கு மேலாக சர்வதேச செயற்பாடுகளில் ஈடுபட்டதனூடாக திரட்டியுள்ள துறையின் முன்னோடி எனும் வகையில், அறிவு, நிபுணத்துவப் பகிர்வை மேற்கொள்ளும் பொறுப்பை INSEE ஐச் சேர்ந்த நாம் கொண்டுள்ளோம். உள்நாட்டு நிர்மாணத்துறையில் பொறியியலாளர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். நிர்மாணத்துறையில் துரிதமாக அதிகரித்து, மாறி வரும் தேவைகளுக்கேற்ப அவர்களின் திறன்கள் மெருகேற்றப்பட்டிருப்பதை உறுதி செய்ய நாம் முயற்சிக்கின்றோம்” என்றார்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடலுடன், கொழும்பு ஸ்கூல் ஒஃவ் பிஸ்னஸ் அன்ட் மனேஜ்மன்ட் உடன் INSEE சீமெந்து கட்டட, நிர்மாணத்துறைக்கு புதிய தயாரிப்புகள், தீர்வுகளை ஊக்குவிக்கும் சிறப்பு நிலையமான  INSEE i2i Collaboration Space பகுதியில் இரு மாதங்களுக்கு மென் திறன் அபிவிருத்தி அமர்வுகளை முன்னெடுக்கும். பேலியகொட பகுதியில் அமைந்துள்ள இந்த நவீன வசதிகள் படைத்த நிலையத்தினூடாக, பொறியியலாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், புத்தாக்கவல்லுநர்கள், கட்டடக்கலைஞர்கள், பயிலுநர்கள், நிபுணத்துவ அமைப்புகள், தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் சந்தைப் போட்டியாளர்களுக்கு பொது இலக்குடன் ஒன்றிணைந்து செயலாற்ற ஊக்கமளிக்கப்படுவதுடன், உள்நாட்டு நிர்மாணத்துறையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--