2021 மார்ச் 04, வியாழக்கிழமை

பொது மக்களின் பார்வையில் பட்ஜெட்

A.P.Mathan   / 2012 நவம்பர் 12 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் இலங்கை ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, அதன் வெளிப்பாடுகள், உள்ளடங்கியுள்ள முன்மொழிவுகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டபொழுது, பெரும்பாலாளோர், வரவு செலவுத்திட்டத்தை வரவேற்கும் வகையிலான கருத்துக்களை முன்மொழிந்திருந்தனர். ஆயினும் சில முன்மொழிவுகள் கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்திருந்தன. இவ்வாறு பொதுமக்களின் கருத்துக்களை அலசும் ஒரு களமாக இந்த பார்வை அமைந்துள்ளது.

மோட்டார் வாகனங்களின் இறக்குமதி வரி வீதத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்த்திருந்த பலருக்கு ஏமாற்றமளிப்பதாக இம்முறை வரவு செலவுத்திட்டம் அமைந்திருந்ததுடன், இதற்கு முரணான வகையில், அறிவிக்கப்பட்டிருந்த விளையாட்டு துறையுடன் தொடர்புபட்ட மோட்டார் வாகனங்களின் மீதான இறக்குமதி வரி தளர்த்தப்படும் எனும் முன்மொழிவு பலரையும் பல்வேறு கோணங்களில் சிந்திக்கச் செய்வதாக அமைந்திருந்தது.

இந்த ஒரு குறிப்பிட்ட விடயத்தை தவிர, ஏனைய விடயங்கள் பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளின் மீதான வரி அதிகரிக்கப்படும் எனும் முன்மொழிவானது, பலரின் கண்டத்தை எதிர்கொண்டது, ஏனெனில் இலங்கையில் நாட்டின் மொத்த பாலுற்பத்தியை நிவர்த்தி செய்வதற்கான சூழ்நிலை உள்ளதா என்பதை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன், எமது நாட்டுக்கும் போதியளவான பால்மாவை தயாரிப்பதற்கான நிலை இன்னமும் ஏற்படவில்லை. மேலும் இந்த வரி அதிகரிப்பின் காரணமாக வறிய நிலையில் காணப்படும் மக்கள் மேலும் ஏழ்மை நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன், ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் எழும்.

விவசாயத்துறைக்கு வழங்கப்படும் சலுகைகள், வரட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் போன்றன பெரிதும் வரவேற்கப்படுவதாக பொதுமக்களின் கருத்துக்கள் அமைந்திருந்தன.

அரச துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 1500 ரூபா சம்பள அதிகரிப்பானது, பெரும்பாலான அரச துறை ஊழியர்களின் எதிர்பை பெற்றுள்ளது. நாட்டில் தற்போது காணப்படும் வாழ்க்கைச்செலவு உயர்வான சூழ்நிலையில், இந்த சம்பள அதிகரிப்பு எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என அவர்களின் கருத்து அமைந்துள்ளது.

பெருந்தோட்டத்துறையை பொறுத்தமட்டில், தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அரச நிவாரணங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும், பெருந்தோட்டக் கம்பனிகளின் மூலம் பயன்படுத்தப்படாமல் தரிசு நிலங்களாக காணப்படும் பகுதிகளில், எதிர்வரும் காலங்களில் இளைஞர்கள் மத்தியில் பகிரப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் வரவேற்கத்தக்க விடயங்களாக காணப்பட்ட போதிலும், இந்த விடயங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் வெளிபிரதேசத்தில் உள்வாங்கப்படக்கூடாது என்பதும் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டிருந்தன.

எனவே 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சாதகமான, பாதமான இரு அம்சங்களையும் கொண்ட ஒரு துறையாக அமைந்துள்ளதாக பொதுமக்களின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .