2020 ஜூலை 15, புதன்கிழமை

Huaweiக்கு எதிராக கைகோர்க்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரின் பிரதான வயர்லெஸ் வலையமைப்பு சேவை வழங்குநர்கள், தமது வலையமைப்புச் சேவைகளை விஸ்தரிப்பதற்காக Nokia, Ericsson ஆகிய நிறுவனங்களின் சாதனங்களைத் தெரிவு செய்ய முன்வந்துள்ளனர். இதனூடாக, Huawei நிறுவனத்தின் தயாரிப்புகளை தவிர்த்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளன.   

சிங்கப்பூரின் பிரதான வியாபார பங்காளர்களான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியுள்ள நிலையில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை, சிங்கப்பூரின் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மேற்கொண்டுள்ளன.

பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து, சீனாவின் உற்பத்தியான Huawei தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு, அமெரிக்கா வழங்கி வரும் ஊக்குவிப்புக்கமைய, இந்தத் தீர்மானத்தை சிங்கப்பூர் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. 

குறித்த தொலைத்தொடர்பாடல் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, தமது சேவைகளைப் பெற்றுக் கொடுக்க, பொருத்தமான சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைத் தெரிவு செய்வதற்கான அனுமதியை, சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கியுள்ளது. இதன்போது, பாதுகாப்பு அடங்கலான முக்கிய தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

இந்தத் தீர்மானம் தொடர்பில், சிங்கப்பூரின் தொடர்பாடல்கள் மற்றும் தகவல்கள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கருத்து வெளியிடுகையில், “எந்தவொரு சேவை வழங்குநரையும் சிங்கப்பூர் தவிர்க்கவில்லை. மாறாக பாதுகாப்பு, நீடித்த உழைப்பு,  வினைத்திறன் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.  

இதேவேளை, சிங்கப்பூரில் 5G வலையமைப்பொன்றை நிறுவும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலியாவின் TPG டெலிகொம், தமது சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு Huawei நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.  
2025ஆம் ஆண்டளவில் சிங்கப்பூர் முழுவதிலும் 5G வலையமைப்பு சேவைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X