2021 மே 08, சனிக்கிழமை

கசிப்பு காய்ச்சுதலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

Niroshini   / 2016 ஜூலை 27 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு காய்ச்சுதலை தடுப்பதற்கு கிராம மட்டங்களிலுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களை பயன்படுத்தவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்துள்ள கசிப்பு காய்ச்சுதலை கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டுள்ளீர்களா என அவரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு காய்ச்சுதல் இடம்பெறும் கிராமங்கள் தொடர்பாக முறைப்பாடு கிடைப்பதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கிராமங்களில் சிவில் பாதுகாப்புக் குழுக்களை பயன்படுத்தி கசிப்பு காய்ச்சுதலை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

கிராமங்களில் நடைபெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்த முடியும். அதற்கான செயற்றிட்டங்களைத்தான் மாவட்டச் செயலகம் மேற்கொண்டு வருகின்றது” என்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கிராமங்களில் கசிப்பு காய்ச்சுதல் மற்றும் விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதில் ஈடுபடுபவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்படுகின்றபோதிலும், நீதிமன்றத்தில் தண்டனை முடிந்து வெளியில் வரும் நபர்கள் மீண்டும் அதே செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக குடும்ப வன்முறைகள், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுதல், கிராமங்களில் சண்டைகள் என பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதன் காரணமாக கசிப்பினைக் கட்டுப்படுத்த வேண்டுமென மாதர் சங்கங்கள் பல குரலெழுப்பி வருகின்றன.

எல்லாவற்றையும் விட மீள்குடியேற்றத்தின் பின்னர் தொழில் வாய்ப்பின்மையால் பலர் தவறான வழிகளில் வாழ்க்கை நடாத்துவதற்கு முயன்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X