2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

’சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு பொலிஸாரின் துணையுள்ளது’

Editorial   / 2017 ஜூன் 13 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், பொலிஸாரின் துணையுடனேயே சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் இடம்பெறுவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் மற்றும் சமூக நிதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட மக்கள், தங்களது தேவைக்குரிய மணலைப் பெற்றுக்கொள்வதில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் அதிக விலைகொடுத்தே மணல் பெறப்படுவதாகவும், இதனால் நியாய விலையில் மணலைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், திங்கட்கிழமையன்று (12) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

'கிளிநொச்சி, கிளாலி, பன்னங்கண்டி, திருவையாறு போன்ற பகுதிகளிலேயே, சட்டவிரோத மணல் அகழவுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு, சட்டத்துக்கு முரணான முறையில் அகழப்படும் மணல், வெளிமாவட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. இதற்காக, பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்கப்படுகின்றது.

அதேபோல், சட்;டவிரோதக் கசிப்பு உற்பத்தி போன்ற செயற்பாடுகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே, நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. இதனாலேயே, சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யும் பொதுமக்களுக்கு, அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன' என்று அவர் மேலும் கூறினார்.

மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்தை அடுத்து, மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம், ஆர்ப்பாட்டக்காரர்களினால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .