2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

‘பூநகரி குளம் அமைப்பதற்குரிய நிதி கிடைக்கப்பெற்றுள்ளது’

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பூநகரி குளம் அமைப்பதற்குரிய ஆரம்பகட்ட செயலாற்று ஆய்வுகளுக்கு  ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் திட்டத்தின் கீழ், மத்திய அரசாங்கத்தால் 45 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, மாவட்டப் பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் இராஜகோபு தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிக் குளத்தை அமைப்பதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதன் பணி கிடப்பில் இருப்பதாக, பூநகரி பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியிலாளரைத் தொடர்புகொண்டு இது தொடர்பில் கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், பூநகரிக்குளம் அமைப்பது தொடர்பான செயலாற்று ஆய்வுகள் மற்றும் ஆரம்பக்கட்ட வேலைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசாங்கத்தால் 45 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து  அதற்கான பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறினார்.

அதாவது பூநகரிப் பிரதேசத்தில்  ஒரு பாரிய நீரத்தேக்கமொன்றை அமைக்கும் வகையில், 2012ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீரப்பாசனத் திணைக்களத்தால், அப்போதைய பிரதி நீர்ப்பாசனப் பொறியியலார் என்.சுதாகரனால் ஆரம்ப கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டனவெனத் தெரிவித்தார்.

“கிளிநொச்சி மாவட்டத்தை கடந்து செல்கின்ற மற்றும் அதிக நீர் வரத்தைக் கொண்ட கனகராயன் ஆறு போன்ற பாரிய ஆறுகள் மறிக்கப்பட்டு, கிளிநொச்சியின் கிழக்குப் பிரதேசத்தில் இரணைமடுக்குளம், கல்மடுக்குளம், பிரமந்தனாறுக்குளம், கனகாம்பிகைக்குளம் ஆகிய பாரிய குளங்கள் அமைந்துள்ளன.
“இதேபோல, கிளிநொச்சியின் மேற்குப் பிரதேசத்தில் உள்ள பாரிய நீப்பாசனக்குளமாக அக்கராயன்குளமும் அதற்கு அடுத்தாற்போல் குடமுருட்டிக்குளம், நாகபடுவான்குளம், வன்னேரிக்குளம் போன்ற குளங்கள் அமைந்துள்ளன” என்றார்.

இந்தக் குளங்களுக்கு ஒப்பான பாரிய நீர்த் தேக்கம் ஒன்றை கிளிநொச்சியின்  பூநகரிப் பிரதேசத்தில் அமைக்கலாமென்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டு, இது தொடர்பான ஆய்வுகள் நீர்ப்பாசனத் திணைகளத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டனவெனவும், அவர் கூறினார்.

அதாவது, பூநகரிப் பிரதேசத்துக்குட்பட்ட மாழாப்புக்குளம், கொக்குடையான் குளம், புத்தியற்ற மோட்டை வெள்ளப்பள்ளம் முறியவிழுந்தான், கொக்குடையான், கல்லாய்குளம், களுவெளி உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்டசிறுசிறு குளங்களை உள்ளடக்கி இக்குளத்தை அமைக்கலாம் என்றும் திட்டங்கள் வரையப்பட்டுள்ளனவெனத் தெரிவித்தார்.

இவ்வாறு குளங்களை உள்ளடக்கி ஏழு கிலோமீற்றர் அணைக்கட்டு மூலம் இக்குளம் அமைக்கலாமென்ற திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அவர், இலங்கையில் சுமார் 103க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுக்கைகள் காணப்பட்டனவெனவும் கூறினார்.

“இதில், கனகராயன் ஆறு மண்டைக்கல்லாறு, அக்கராயன் ஆறு, உள்ளிட்ட ஏழு ஆறுகள் கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோரங்களில் சங்கமிக்கின்றன.
அக்கராயன் ஆற்றுக்கும் மண்டைக்கல்லாற்றிக்கும் இடைப்பட்ட பகுதியில் இக்குளம் அமைவதனால், இவ்விரு ஆறுகளின் ஊடாக வருகின்ற நீர் மற்றும் இக்குளத்தின் மேற்பகுதிகளில் உள்ள பிரதேசங்களில் இருந்து வருகின்ற நீர் என்பவற்றால் இக்குளத்தின் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

“இதன் மூலம் பூநகரியில் உள்ள கிட்டத்தட்ட மூவாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் இருபோகங்களில், பயிர்ச்செய்கை மேற்கொள்ளமுடியும் என்பதுடன், இக்குளம் ஆழம் குறைந்த குளமாக இருப்பினும், அதிகளவான நீரேந்துப் பிரதேசமாகவும் அமையும். இக்குளத்தை அமைப்பதற்கு கிட்டத்தட்ட 750 மில்லின் ரூபாய்க்கும் மேற்பட்ட நிதி தேவையென்றும் அப்போது  மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது” என்றும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X