2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மன்னாரிலும் வெடிபொருட்கள் மீட்பு

Thipaan   / 2016 மார்ச் 30 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்துக்குச் சொந்தமான காணியின் பின் பகுதியில் இருந்து, ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.

2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், குறித்த கமநல சேவைகள் நிலையத்துக்கு சொந்தமான காணியில் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையம் இயங்கிவந்தது.

பின்னர், பொலிஸ் நிலையம் சற்று தொலைவில் மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் கமநல சேவைகள் நிலையம் இயங்கி வந்தது.

இந்த நிலையில், குறித்த காணியின் பின் பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸாரினால் மன்னார் நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த பகுதி தோண்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று புதன்கிழமை மதியம் 2 மணியளவில், குறித்த பகுதிக்கு நீதவான் சென்றிருந்தார்.

அடையாளம் காணப்பட்ட பகுதி நீதவான் முன்னிலையில் தோண்டப்பட்ட போது,   எம்.ஜீ.எல்.40 மில்லி மீற்றர் குண்டுகள்-02, ஆகஸ் கைக்குண்டு-01, ரி.82 தரம் ஒன்று வகை குண்டு-02, ரி.82 வகை இரண்டு குண்டுகள்-05, ஜே.ஆர்.குண்டுகள்-02, கே.400 தர குண்டுகள்-03, சிங்கப்பூர் குண்டு-01, கிளைமோர்-06, ரங்கன் 99 தர நிலக்கண்ணி வெடிகள்-16 மற்றும் அதற்கு பயண் படுத்தப்படும் பியூஸ்கள்-16,பாக்கிஸ்தான் நிலக்கண்ணி வெடிகள்-02, அதற்கான பியூஸ்-01, மின்சார பலகை வெடி பொருள்-01, அருள் செல்கள்-03, 6 மில்லி மீற்றர் மோட்டார் செல்-01 மற்றும் பாரிய இரும்பு பெட்டகம் ஒன்றும் மீட்கப்பட்டன.

குறித்த வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு உத்தரவிட்ட நீதவான், அப்பகுதிக்குள் வரும் மக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குறித்த ஆயுதங்கள் அகழ்வு செய்யப்பட்ட போது பொலிஸார், கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X