2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

களவெடுத்த 03 சிறுவர்களுக்கு புத்திமதி

Suganthini Ratnam   / 2014 மார்ச் 28 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தின் முருங்கன் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து உணவை களவெடுத்ததாகக் கூறப்படும் சிறுவர்கள் 03 பேருக்கு  மன்னார் நீதிமன்றம் புத்திமதி கூறியதுடன், இச்சிறுவர்களின் பெற்றோரையும் எச்சரித்துள்ளது. 

அத்துடன், இச்சிறுவர்களின் நடவடிக்கைகளை  கண்காணித்து அடுத்த தவணையின்போது  நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தருக்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதன் பின்னர் பெற்றோரிடம் இச்சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

இச்சிறுவர்களை அவர்களின் பெற்றோருடன் மன்னார் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (27) ஆஜர்படுத்தியபோதே அந்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது. 

முருங்கன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர்  தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது அவரது வீட்டிலிருந்து சுமார் 13 வயது மதிக்கத்தக்க 03 சிறுவர்கள் ஓடுவதைக் கண்டார்.  இவ்வாறு ஓடிய 03 சிறுவர்களும் அயலில் வசிப்பவர்கள் என்பதை அடையாளம் கண்ட  அந்நபர், தனது வீட்டிலுள்ள பொருட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டார்.

இது தொடர்பில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் அந்நபர் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, அம்மூன்று சிறுவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். 

கடும் பசி காரணமாக உண்பதற்கோ அல்லது அருந்துவதற்கோ  ஏதாவது கிடைக்குமா எனத் தேடியே அவ்வீட்டினுள் நுழைந்ததாக பொலிஸாரின் விசாரணையில் இச்சிறுவர்கள் தெரிவித்தனர்.

கடந்த யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச்  சென்று மீளவும் இலங்கைக்கு திரும்பியதாகவும் தங்களது பெற்றோருக்கு நிரந்தர தொழில் இல்லாமையால் தாங்கள் பசியால் வாடுவதாகவும் இச்சிறுவர்கள்  தெரிவித்தனர்.

இதன்போது, இவ்வாறு பல வீடுகளில் தாங்கள் களவெடுத்ததை இச்சிறுவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .