2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த 51 குடும்பங்கள் மாந்தை மேற்கு பிரதேசத்தில் மீளக்குடியேற்றம்

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

மன்னார்  மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் காக்கையன் குளம் கிராமத்திலிருந்து 1990ஆம் ஆண்டு இடம் பெயர்ந்த குடும்பங்களில் 51 குடும்பங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீளக்குடியேறியுள்ளனர்.

மீள்குடியேறியுள்ள மாந்தை மேற்கு மக்களின் தேவைகள் குறித்து ஆராயவென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிசாட்  பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் அங்கு விஜயம் செய்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இரணை இலுப்பங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள இலுப்பைக்குளம், செக்கட்டிகுளம், மண்கிட்டி, பூசாரியார் குளம் மக்களை சந்தித்து  கலந்துரையாடியதுடன் அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தற்போது இரணை இலுப்பங்குளம் பாடசாலையில் 100 குடும்பங்களை சேரந்த 359 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் ராஜரட்ணம் தெரிவித்தார்.

இப்பாடசாலையில் 91 மாணவர்கள் தற்போது கல்வி பயிலுவதாகவும் அவர் கூறினார்.

மாணவர்களின் கற்றலுக்கு தேவையான உபகரணங்களின் தட்டுப்பாடுகள் குறித்த கவனம் செலுத்துமாறு அதிபர், அமைச்சர் றிசாட்  பதியுதீன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை காக்கையன் குளம் மதீனா நகருக்கு விஜயம் செய்த அமைச்சர், அம்மக்களது வாழ்வாதார மேம்பாடுகளுக்கான திட்டங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

தற்போது விவசாய செயற்பாடுகளுக்காக 5 குளங்களை புனரமைப்பு செய்வதற்கான பணிப்புரையினை பிரதேச செயலாருக்கு அமைச்சர் வழங்கினார்.

அதனடிப்படையில், காக்கையன் குளம், துவரங் குளம், வெளிக்குளம்,சின்னரசன் குளம், உவர்க் குளம் என்பன புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

இக்கிராமத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு 265 குடும்பங்கள் வெளியேறிய நிலையில் தற்போது அக்குடும்பங்களின் எண்ணிக்கை 1200 ஆக உயர்ந்துள்ளதால் இடப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.

சுய தொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் முதற்கட்டமாக ஐந்து கிராமங்களை சேர்ந்த 300 குடும்பங்களுக்கு மேட்டு நில மிளகாய் பயிர் செய்கைக்கான தண்ணீர் இயந்திரம், விதை மற்றும் பசளைகளை  இலவசமாக பெற்றுக் கொடுக்கும் பணிகளை துரிதமாக தமது அமைச்சின் மூலம் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுத்தின் இங்கு கூறினர்.

பாலம்பிட்டி, பெரியமடு, தட்சனாமருதமடு, பாலபெருமால்கட்டு, பாலையடி, புதுக்குளம் ஆகிய கிராமங்களிலேயே இந்த பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனையடுத்து மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலகப் பிரவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயம் கூட்டம் அமைச்சர் றிசாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரது தலைமையில் அடம்பன் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாருக், செல்வம் அடைக்கலநாதன், வினோனோதரலிங்கம், சிவசக்தி ஆனந்தன் உட்பட மன்னார் அரச அதிபர் நிக்கலஸ் பிள்ளை, பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் பல்வேறு தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுன் மின்சாரம், பாதை, வீடமைப்பு திட்டங்கள் குறித்து பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--