2025 ஜூலை 02, புதன்கிழமை

முறிகண்டிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் சிறு வணிகர்களுக்கான கடைகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 11 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

முறிகண்டிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கான கடைகள் உரிய வர்த்தகர்களிடம் கைளிக்கப்பட்டுள்ளன.

ஆலயத்துக்கான அர்ச்சனைப் பொருட்கள், கச்சான் கடலை மற்றும் சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் இந்தக் கடைகளை நேற்று பாரம்பரியக் கைத்தொழில் சிறுகைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தேர்வு செய்யப்பட்ட வர்த்தகர்களிடம் கையளித்தார்.

போருக்குப் பின்னர் புதிய முறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் சுற்றுச் சூழலில் தனியார் வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு உரிய அனுமதி வழங்கப்படுவதில் நீண்ட நாட்களாக தாமதங்கள் ஏற்பட்டிருந்தன.

ஆலயச் சூழலை புதிய முறையில் நிர்மாணிப்பதன் காரணமாக நீண்டகாலமாகவே அந்தப் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுடைய கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய வளாகம் அமைக்கப்பட்டதை அடுத்து தமக்கான இடத்தை ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள், முல்லைத்தீவு அரசாங்க அதிபர், புதுக்குடியிருப்புப் பிரதேச சபை ஆகிய தரப்புகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் மூலம் கச்சான் வியாபாரம் செய்வதற்கான முப்பது கடைகளும் அர்ச்சனைப் பொருள் மற்றும் சிற்றுண்டிப் பொருட்கள் விற்பனைக்கான பன்னிரண்டு கடைகளும் நிர்மாணிக்கப்பட்டு சீட்டிழுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய வர்த்தகர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இதேவேளை முறிகண்டிப் பிள்ளையார் கோவிலை அண்மித்த வளாகப் பகுதியில் புதிய தபாலகம் ஒன்றும் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி நகரப் பிரிவுத் தளபதி கேணல் பீரிஸ், மாங்குளம் தலைமைக் காரியாலயத்தின் பொலிஸ் அதிகாரி அமரசிங்க, கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் பண்டார, புதுக்குடியிருப்புப் பிரதேச சபைத்தலைவர் செ.திஸ்ஸவீரசிங்கம், பிரதேச சபைச் செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் வர்த்தகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0

  • vajani Friday, 12 November 2010 07:58 PM

    முருகண்டி கோவில் பாரம்பிரிய தர்ம கத்தா தனது உரிமைக்காக உயர் நீதிமன்றில் வழக்குத்தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் வலித்தேங்க்கையை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்த கதையா தனியார் காணியை ஒதுக்கீடு செய்து கடைகட்டி வர்த்தகர்களுக்கு கொடுப்பது நீதியா? மற்றும் புனிதமான கோவில் சுற்றாடலை வர்த்தக நோக்கம் கொண்டு மாற்றி அமைக்கப் படுவது நியாயமா ? பிள்ளையாரின் கீர்த்தி சிறியதல்ல, மக்களை ஏமாத்துவதாக நினைத்து, மகேசனை ஏமாத்துகிறார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .