2020 நவம்பர் 25, புதன்கிழமை

தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் அரசியல் தீர்வு - டக்ளஸ்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 14 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

 

தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கான அரசியல் தீர்வு விரைவில் காணப்படும் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஏ௯ வீதியை அகலமாக்கல் மற்றும் புனரமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு உரையாற்றிய அவர் மெலும் கூறியுள்ளதாவது :- 'ஏ௯ வீதி திறப்பு என்பது வட மாகாண மக்களுக்கான சொர்க்கவாசல் திறப்பது போன்றதாகும். கடந்த காலங்களில் இப்பாதையை புனரமைப்பதற்கும், அகலப்படுத்துவதற்கும் பல்வேறு தடைகள் இருந்து வந்த போதிலும் தற்போது அந்தத் தடைகள் யாவும் நீக்கப்பட்டு, இன்று இவ்வீதிக்கான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வீதி புனரமைப்புக்காக சீன் உதவியிலிருந்து 1,900 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீதியின் புனரமைப்புப் பணிகளின் போது உள்ளுர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 

இதேவேளை, எமது தமிழ் சமூகம் எதிர்காலத்தில் வளமான தேசத்தில் நம்பிக்கையுடன் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்தித் தருவது மட்டுமல்லாமல் மக்களின் இயல்பான வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படுவதற்காக நாம் பாடுபடுவோம்.

அமைச்சர் பீரிஸ் கருத்து:-

இந்நிகழ்வில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றும் போது, ' ஏ௯ வீதி அபிவிருத்திப் பணிகள் இந்த பிரதேசத்திற்கு மட்டுமல்லாமல் முழு நாட்டுக்குமே பயன்தரக் கூடியது. கடந்த கால யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், எல்லா மக்களும் இந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதே எல்லோருடைய அபிலாசையாகவும் இருக்கிறது.

ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமானவையாக அங்குள்ள வீதிகளே காணப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டே வட மாகாணத்திற்கான இந்த வீதியும் புனரமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் இங்குள்ள மக்கள் வியாபாரம், கல்வி உள்ளிட்ட எல்லா வகையான வசதிகளையும் இலகுவாகப் பெற்றுக் கொண்டு அபிவிருத்திப் பாதையில் பயணிக்க வேண்டும்' என்றார்.
 
வடக்கின் வசந்தம் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள வீதி புனரமைப்புப் பணிகளின் ஆரம்ப விழாவில், சீன பிரதிநிதி எட்வின் ஜோன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜக்ஷ, கிளிநொச்சி அரச அதிபர் ரூபினி கேதீஸ்வரன், நாடாளுளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன், உதித்த லொக்குபண்டார, ஸ்ரீரங்கா உள்ளடங்கலாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், படை அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .