2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் நல்லிணக்க ஆணைக்குழு

A.P.Mathan   / 2011 ஜனவரி 08 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று 8ஆம் திகதி மன்னாரில் சாட்சியங்களை பதிவு செய்துள்ளது.      

நாட்டின் சகல பாகங்களுக்கும் சென்று மக்களின் சாட்சியங்களை பதிவுசெய்து வரும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு, தனது சாட்சியங்கனை பதிவு செய்து கொள்வதற்காக இன்று மன்னாரிற்கு வருகை தந்தது.

மன்னார் மாவட்ட செயலக கட்டிடத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் சாட்சி பதிவுகள் ஆரம்பமாகின. இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்கூரிய இராயப்பு யோசப் ஆண்டகை முதலில் சாட்சியங்களை வழங்கினார். இதன்போது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை மற்றும் முன்னாள் குரு முதல்வர் அருட்தந்தை சேவியர் குருஸ் ஆகியோர் இணைந்து முதலில் சாட்சியமளித்தனர்.

இதனைத்தொடர்ந்து மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை பெனோ அலைக்சான்டர் சில்வா தலைமையில் மும்மத பிரதிநிதிகளும் இணைந்து சாட்சியங்களை பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து காணமல்போன, கடத்தப்பட்டவர்களின் உறவினர்களும் சாட்சியமளித்தனர். இதேவேளை மீள்குடியேற்றம் செய்யப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்களும் சாட்சியமளித்தனர்.

இதனைத்தொடர்ந்து சாட்சியமளிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவர்களின் கடிதங்கள் பொற்றுக்கொள்ளப்பட்டதோடு அவை பரிசீலனை செய்யப்பட்ட பின் விசாரணைகளுக்காக அழைக்கப்படுவார்கள் என ஆணைக்குழு மக்களுக்கு தெரிவித்தது. மதியம் 2 மணியளவில் அமர்வுகள் நிறைவுபெற்றன. இதன்போது மன்னார், நாணாட்டான், முசலி ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்து பல நூற்றுக்கணக்காண மக்கள் வருகைதந்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவு மாலை 3 மணியளவில் மாந்தை மேற்கு உதவி அரச அதிபர் பணிமனையில் இடம் பெற்றது.

இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டபோதும் குறிப்பிட்ட சிலருக்கே சாட்சியம் அளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. நாளைய சாட்சி பதிவுகள் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .