2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் உடைப்பெடுத்த குளங்கள் உடன் திருத்தப்பட வேண்டும்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி.

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கபில்)

வவுனியா மாவட்டத்தில் உடைப்பெடுத்த 101 சிறுகுளங்கள் அவசரமாகத் திருத்தப்பட வேண்டுமெனவும் மீள்குடியேறிய மக்கள் இந்த வருட காலபோக நெற்செய்கையை மேற்கொள்ள குளங்களை திருத்தும் பணி அவசியமானதெனவும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேறிய மக்களது நிலைமை தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்த நடவடிக்கைகள் முடிவிற்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்த பின்னரும் வடக்கில் மீள்குடியேறிய மக்கள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளான விவசாயம், கால்நடை வளர்ப்பு முதலானவற்றை சிரமமின்றி மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய தடைகள் இன்னமும் நீங்கவில்லை.

சிறிய தொகையில் திருத்தப்படக்கூடிய 101 குளங்களுக்கு அரசாங்கம் நிதியில்லையென கையை விரிக்கிறது. ஆனால் விவசாயக் கண்காட்சி மற்றும் வடக்கின் வசந்தத்தின் வேலைத்திட்டத்தினை விளக்குவதற்காக மில்லியன் கணக்கான ரூபாவை விளம்பரங்களுக்காகச் செலவு செய்துள்ளது. மிளகாய் பயிர்ச்செய்கை, வீட்டுத்தோட்டம் மற்றும் கச்சான் உற்பத்தி போன்ற வன்னியின் பாரம்பரிய பயிர்ச்செய்கைக்குப் பாடம் நடத்துவதாகத் தெரிவித்து அரசாங்கம் தேவையின்றி விளம்பரத்திற்காக மாத்திரம் மில்லியன் கணக்கில் செலவு செய்துள்ளது. தெளிவான கொள்கையும் வேலைத்திட்டமும் இல்லாமையால் மக்களின் பணம் விரயமாக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசியச் செலவுகளுக்கு நிதிப்பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.

மீள்குடியேறிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கான அடிப்படைத் தேவைகளான குளங்கள் புனரமைப்பு, வீதித் திருத்தம், பாதுகாப்பாக கிணற்றில் நீர் எடுப்பதற்கு கிணறுகளைக் கட்டிக்கொடுத்தல் மலசலகூடம் அமைத்தல் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு நிதியில்லையென அரசாங்கம் கையை விரித்துள்ளது.

வவுனியா கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் அலுவலகத்தால், வவுனியா மாவட்டத்திலுள்ள 674 சிறிய குளங்களில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள 87 குளங்கள் நீங்கலாக மிகுதி 587 குளங்களுள் 175 குளங்களின் திருத்த வேலைகளை மேற்கொள்ள கமநல அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும், அரசாங்கத்திடம் நிதியில்லையெனக் காரணம் காட்டி குளத் திருத்த வேலைகள், இவ்வருட காலபோகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.  

திருத்தப்பட வேண்டிய குளங்களுள் 101 குளங்களின் உடைப்பெடுத்த அணைக்கட்டுக்கள் மிக அவசரமாகத் திருத்தப்படவேண்டும். இவற்றுக்கான செலவு 80 மில்லியன் ரூபாவிற்கும் குறைவானதே. அத்தகைய குளங்கள் திருத்தாமல் விடப்பட்டால் விவசாயத்தையே தமது பிரதான ஜீவனோபாயமாகக் கொண்டுவாழும் இங்குள்ள மீள்குடியேற்ற மக்கள் இவ்வாண்டு காலபோக நெற்செய்கையை மேற்கொள்ள முடியாது. இவர்கள் 2013 ஏப்ரல் மாதமளவிலேயே தமது அறுவடையை நினைத்துப்பார்க்க முடியும். அதுவரை வறுமை வாழ்வையே இவர்கள் எதிர்நோக்க நேரிடும்.

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்குத் தேவையான வசதிகள் குறித்துத் தெரிவிக்கையில், அங்கு பதினாறு இலட்சம் ரூபாய்க்கும் குறைவான பெறுமதியுடைய பாதுகாப்பு உபகரணமான (ஜங்கிள் பூட்ஸ்) சப்பாத்து மற்றும் அளவீட்டு நாடா, கணனி, ஜி.பி.எஸ் கருவி ஆகியவற்றுடன் செய்மதி வரைபடங்களைப் பெறுவதற்கான மென்பொருள் என்பனவற்றை வழங்க வேண்டும்.

இதனை விட வடக்கில் புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகளைத் தடையின்றி மேற்கொள்ள வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு நெற்களஞ்சியங்கள், உரச்சேமிப்புக்கூடங்கள், விவசாயக்கட்டடங்கள், பயிற்சி மையங்கள், உத்தியோகத்தர் விடுதிகள் மற்றும் திணைக்களத்திற்கான உபஅலுவலகங்கள் போன்றவை அமைக்கப்பட வேண்டியுள்ளது.
வடக்கின் அபிவிருத்தியைத் துரிதமாக மேற்கொள்வதற்காகவே வடக்கின் வசந்தம் உருவாக்கப்பட்டுள்ளதென விளம்பரம் செய்யப்படுகையில், மக்களுக்கான வாழ்வாதார அபிவிருத்திக்கு அவசியமாகவுள்ள மேற்குறித்த உட்கட்டுமான விடயங்களின் நிர்மாணம் குறித்து வடக்கின் வசந்தம் எத்தகைய முக்கியத்துவம் வழங்குகிறது என்பதை இத்தகைய தாமதங்களும் அலட்சியங்களும் வெட்ட வெளிச்சமாகக் காட்டுகின்றன என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .