Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கபில்)
அவசர அவசரமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைகளை மீள்வரையறை செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் வன்மையாகக் கண்டித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மூவரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளனர்.
அவ்வறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் சென்ற 21.09.2011ஆம் திகதியன்று முல்லைத்தீவு கச்சேரியில் இடம்பெறும் என்று அரசாங்க அதிபரால் உத்தியோகபூர்வமாக 16.09.2011 அன்று கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் இக்கூட்டம் 03.10.2011 அன்று இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டு அதுவும் ஒத்திவைக்கப்பட்டு, 07.10.2011 அன்று நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டு பின்னர் 03.10.2011 கடிதம் மூலம் இவ்வபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவசர அவசரமாக 10.10.2011 அன்று மாவட்டத்திற்குள்ளான மீள்எல்லை வரையறை தொடர்பான கலந்துரையாடல் கச்சேரியில் இடம்பெறும் என்று 06.10.2011 திகதி அரசாங்க அதிபரின் கடித மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் மிகமிகக்குறைவு. அதிமுக்கிய முடிவுகள் எட்டப்படும் விடயங்கள் அனைத்தும் எமது கட்சி மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் ஆலோசிக்கப்படுவதுடன், நிபுணர்களுடனும் கலந்தாய்வு செய்ய பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு எமக்குப் போதிய அவகாசத்தினை வழங்கியிருக்க வேண்டும்.
மேலும் உடனடிப் பிரச்சினையான மீள்குடியேற்றம், மற்றும் மீள்குடியேறியோருக்கான வாழ்வாதார மேம்பாடு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய இத்தருணத்தில், மாரிக்காலத்திற்கு முன்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கவேண்டிய வேளையில், எத்தகைய அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் ஒப்புதல் தேவைப்படுகின்றது. ஆனால் அத்தகைய அவசர வாழ்வாதார விடயங்கள் கிடப்பில் போடப்பட்டு எல்லை மீள்நிர்ணயம் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றது.
அரசாங்கத்தின் எந்தவொரு கூட்ட அழைப்பிதழுக்கும் உள்ள பொதுவான கால அவகாசம்கூட இதற்கு வழங்கப்படாமல் அதிமுக்கியமான மாவட்ட எல்லை மீள்வரையறை தொடர்பான கூட்டத்திற்கு அவசர அவசரமாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதன் நோக்கம் என்ன?
இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கான அழைப்பிதழிலேயே மாவட்டத்திற்குள்ளான மீள்எல்லை வரையறை செய்வது என்று தெரிவிக்கப்பட்டதன் மூலம் அரசு தனது உண்மை முகத்தைக் காட்டி நிற்கின்றது. ஏற்கனவே எல்லைகள் மீள வகுக்கப்பட்டு அதனை நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கிவிட்டு எதுவும் தெரியாததுபோல் இத்தகைய அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதா?
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில், இம்மாவட்டத்தில் எமக்குள்ள சிறப்புரிமைகள் மறுக்கப்பட்டு, மேற்படி கலந்துரையாடல் அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் எல்லை மீள்வரையறை ஆணைக்குழு பங்கேற்கும் இக்கூட்ட அழைப்பிதழ் நேரடியாக அமைச்சு எமக்கு வழங்காமல், அமைச்சின் நிர்வாகத்தின் ஓர் அங்கமான அரசாங்க அதிபரினூடாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இக்கலந்துரையாடலில் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு எம்மையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
காணி, மாவட்ட எல்லைகள் மற்றும் சட்ட ஒழுங்கு போன்ற அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிரப்படவுள்ள ஓர் அரசியல் தீர்வு நோக்கிய பேச்சுவார்த்தைகள் கொழும்பில் எம்முடன் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், யாழ் மாவட்டத்தில் மக்கள் தொகை குறைந்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ள அரசு தன்னிச்சையாக ஏற்கனவே இங்குள்ள காணிகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்ததுடன், பாரம்பரியமாக நிலைத்திருந்த எம்முடைய மாவட்ட எல்லைகளை தமது வசதிக்கேற்ப வரையறை செய்துவிட்டு எம்மை அழைத்து ஒப்புதல் கேட்கும் இத்தகைய வரைமுறையற்ற ஜனநாயக விரோத செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மேலும், காணி மற்றும் நீர்ப்பங்கீடு என்பவை அரசியல் தீர்வுடன் தொடர்புபட்டிருப்பதால் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும்வரை இத்தகைய எல்லை மாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதனை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம்.
எமது மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக சுமார் அறுபது வருடங்களுக்கு மேலான போராட்ட விளைவுகளாலும் சர்வதேச நேரடி அழுத்தங்களின் பலனாகவும் அரசு விரும்பியோ விரும்பாமலோ தீர்வினை எட்டுவதற்கு எத்தனிக்கின்ற இத்தருணத்தில் எமது ஜீவாதாரமான காணிகளை அபகரிப்பதனையும் மாவட்ட எல்லைகளை மாற்றி, எமது பிரதேசங்களில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தென்னிலங்கை உதிரிப்பாட்டாளிகள் குடியேற்றப்படுகின்றனர். இங்கு மேற்கொள்ளப்படும் அடாத்தான குடியேற்றங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பலமுறை நாம் எடுத்துக் கூறியிருந்தும் அதனைக் கண்டுகொள்ளாமல் தனது எதேச்சாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்தி எமது இருப்பைச் சீர்குலைத்து எமது இனத்தைப் படுகுழிக்குள் தள்ளும் நடவடிக்கைகளைத் தொடர் தேர்ச்சியாக அரசு முன்னெடுத்து வருகின்றது.
காலங்காலமாக ஏற்பட்ட யுத்த அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மற்றும் விரட்டியடிக்கப்பட்ட முல்லைத்தீவு, சிலாவத்தை, அலம்பில், செம்மலை, கொக்குத்தொடுவாய், கருவாட்டுக்கேணி, கொக்கிளாய், உப்புமாவெளி, நாயாறு, முதலான பூர்வீக கிராம மக்களும் இறுதியாக வெளியேற்றப்பட்ட இந்துபுரம், திருமுறிகண்டி, யோகபுரம், திருநகர், குமுளமுனை, கணுக்கேணி, புத்துவெட்டுவான், புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் முதலான ஊர்களைச் சேர்ந்த இடைத்தங்கல் மற்றும் நண்பர்கள், உறவினர்களுடன் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் இதுவரை முறையாக மீள்குடியேற்றப்படாத நிலையில், அவர்களின் காணியுரிமை உறுதிப்படுத்தப்படாத சூழலில், அவர்களின் விருப்பங்களைத் தெரிந்துகொள்ளாமலேயே மாவட்ட எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்படுகின்றன.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்டிருந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தினை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் கூறுபோடுவதற்கு முனைப்புக் காட்டியதைப் போன்று எமது மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களில் சென்று வாழ அனுமதிக்கப்படாத நிலையிலேயே மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் மற்றும் புதிய பிரதேச செயலகப்பிரிவு உருவாக்கல் போன்ற தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை அழிக்கும் செயற்பாடுகள் மிக லாவகமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இனங்களுக்குரித்தான உரிமை தொடர்பான கொள்கை முடிவுகள் அந்த இனத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளின் ஒப்புதலுடனும் மக்களின் விருப்பத்துடனும் மேற்கொள்ளப்படுவதே சிறந்த ஜனநாயக முறையாகும். ஆனால் இந்த நாட்டில் கொள்கை தொடர்பான முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விழா அழைப்பிதழ் போன்று தகவல் தெரிவிக்கும் முகமாகவே எமக்கு அறிவிக்கப்படுகின்றது.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும் ஒருமைப்பாடும் ஏற்பட வேண்டுமானால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களைக் கபளீகரம் செய்யும் செயற்றிட்டங்களைக் கைவிட்டு, வர்த்தமானி அறிவித்தல்கள், சுற்றுநிருபங்கள் அடிப்படையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவ்வறிக்கையில் மூவரும் தெரிவித்துள்ளனர்.
12 minute ago
46 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
46 minute ago
2 hours ago
2 hours ago