2025 ஜூலை 10, வியாழக்கிழமை

'பல்வேறு தடைகளைத் தாண்டியே மன்னார் நகரசபை சேவையாற்ற வேண்டியுள்ளது'

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

பல்வேறு தடைகளையும் இடையூறுகளையும் தாண்டியே மன்னார் நகரசபை தனது சேவைகளை மக்களுக்கு ஆற்ற வேண்டியுள்ளதென மன்னார் நகரசபை உறுப்பினர் ரெட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மன்னார் நகரசபை எல்லைக்குட்பட்ட கீரி என்னும் இடத்தில் மன்னார் நகரசபை தலைவர், உபதலைவர்,  உறுப்பினர்கள் ஆகியோருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கீரி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மன்னார் நகரசபைத் தலைவர் ஞானப்பிரகாசம்,  உபதலைவர் ஜேம்ஸ் மற்றும் உறுப்பினர்கள் மன்னார் நகரசபையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறினர்.

மன்னார் நகரசபை உறுப்பினர் ரெட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து அவற்றை எம்மால் முடிந்தவரை தலைவரின் வழிகாட்டுதலோடு நிறைவேற்றுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். ஆயினும் சிறுசிறு விடயங்களை முன்னெடுப்பதற்குக் கூட எமக்குப் பாரிய தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

பொது சேமக்காலையைப் புனரமைத்தல், உள்ளக வீதிகளைத் திருத்துதல், தெருவிளக்குப் போடுதல், சீரான முறையில் குப்பைகளை அகற்றுதல், சிறுவர் பூங்கா மற்றும்  பொழுதுபோக்குப் பூங்கா அமைத்தல், மணிக்கூட்டுக் கோபுரம் அமைத்தல், கடைத்தொகுதிகளை நிர்மாணித்தல், மாரிக்காலத்திற்கு முன்பாக வடிகால்களையும் ஓடைகளையும் சீர்செய்தல் போன்ற பல்வேறு திட்டங்களை எம்மால் முடிந்தளவுக்கு முன்னெடுத்து வருகின்றோம்.

இத்தகைய வேலைத்திட்டங்களை நிறைவேற்ற நகரசபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதிலும், அதிகாரிகளும் அவர்களுக்கு மேலுள்ளவர்களும் சிற்சில தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கென்று மன்னார் பாலத்தின் கீழுள்ள பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பணிகளை முன்னெடுக்க முயலுகையில், இந்த இடம் வனவிலங்கு சரணாலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதென்ற அறிவிப்புப்பலகை போடப்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைவதை வேறெங்கும் காணமுடியாது.

இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. இன்னமும் தீர்வு காணப்படாமலேயே இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று பொதுசவக்காலையில் துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது சில தனிநபர்கள் அந்த இடம் தமக்குச் சொந்தமானது என்று முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தருகின்றனர்.

இவ்வளவு தடைகளுக்கும் மத்தியில்தான் எமது தலைவர் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றார். அவருடன் உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

இப்பொழுது நகரசபையின் எல்லைக்குட்பட்ட வீதிகளில் தெருவிளக்குகள் பொருத்தும் பணியினை மேற்கொண்டுள்ளோம். இதற்காக சுமார் பத்தரை இலட்சம் ரூபா செலவில் 400 வீதிவிளக்குகளைப் பொருத்தி வருகின்றோம்.

அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்குள்ள நபர்களின் தடைகளை மீறி நாங்கள் எமது மக்களுக்கான அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

எமது மக்கள் எமக்கு வெறுமனே தெருவிளக்கு போடுவதற்கும் சாலைகளைப் புனரமைப்பதற்கும் மட்டும் வாக்களிக்கவில்லை என்பதனை நன்குணர்ந்து எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தடைகளையும் தாண்டி அபிவிருத்திப் பணிகளிலும் அரசியல் தீர்விற்காகவும் முனைந்து செயற்பட்டு வருகின்றோம்.

எம்மால் முடிந்த அனைத்துப் பணிகளையும் நாம் செய்து வருவதுடன் எதிர்காலத்திலும் எத்தகைய தடைகள் வந்தாலும் அவைகளைத் துணிவுடன் முகங்கொடுப்பதற்கும் நாம் தயாராகவே உள்ளோம் என்பதனைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

தேவையேற்பட்டால் எமது மக்களை அணிதிரட்டி நகரசபையின் செயற்பாடுகளுக்கு எதிராக சதி செய்பவர்களுக்கு எதிராகப் போராடவும் நாம் தயங்கமாட்டோம் என்பதனையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .