2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

'இயற்கையில் சுனாமியும் செயற்கையில் முள்ளிவாய்க்காலும் மறக்கமுடியாதவை'

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

இயற்கையில் சுனாமியின் தாக்கத்தையும் செயற்கையில் முள்ளிவாய்க்கால் அவலமும் தமிழ் மக்களால் மறக்கமுடியாதவை  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.

சுனாமியால் உயிர்நீர்த்த மக்களின் 8ஆவது வருட நினைவுதினம் பூந்தோட்டம் சுனாமி நினைவுத்தூபியில் நகரசபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'இலங்கையிலும் குறிப்பாக வட கிழக்கிணைந்த எமது தாயகப் பகுதியில் தான் கடற்கோளின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பலர் அங்கவீனராகினர்.

2004இல் ஏற்பட்ட கடல்கோள் பாதிப்பின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பெரியளவில் நிதியுதவிகளும் பொருளாதார உதவிகளும் கிடைத்தன.
ஆயினும் அந்த உதவிகள் அப்போது ஆட்சியிலிருந்த சந்திரிக்கா அரசாங்கத்தினால் வட கிழக்கிணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசத்தை சென்றடையவில்லை.

சுனாமி மீள்கட்டுமானப் பணி சார்ந்த குழுவொன்று அமைக்கப்பட்டபோதிலும், அக்குழு இனவாதிகளினால் அன்றைய சூழ்நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் எமது மக்களுக்கு வந்தடைய வேண்டிய உதவிகள் யாவும் இல்லாமல் போனது. ஆயினும் மக்கள் தங்கள் சுயமுயற்சியால் புலம்பெயர்ந்தவர்களின் உதவியாலும் ஓரளவேனும் மீண்டெழுந்தனர்.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது தாயகத்தில் நடப்பவையெல்லாம் அதர்ம வழி சார்ந்த விடயங்கள். திட்டமிட்ட காணி அபகரிப்;புக்கள், புத்தர் சிலை நிறுவுதல், இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை, கைதுசெய்தல் என பல அக்கிரமங்கள் தொடர்கின்றன.

2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் அரசாங்கத்திற்கு மிகப்பெரும் அதிர்ச்சிப்பொறி காத்திருக்கிறது. எமது மக்களின் துயரமான வாழ்விற்கும் துன்பகரமான சூழல்களும் இல்லாமல் போக விடுதலை நோக்கிய பயணங்கள் சிறந்து விளங்கும் என நம்புகின்றோம்.

இயற்கை அனர்;த்தம் என்ற அடிப்படையில் 2004 சுனாமி அனர்த்தமும் செயற்கை பேரவலம் என்ற அடிப்படையில் 2009 முள்ளிவாய்க்கால் அவலமும் என்றும் தமிழர்களின் மனங்களில் மறக்க முடியாத சம்பவங்களே ஆகும். எனவே இவ்வாறான இடர்களிலிருந்து எம்மை நாமே ஆறுதல்படுத்தி புதிய பாதையில் புதிய சிந்தனையுடன் பயணிப்போம்' என்றார்.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான தேசமான்ய சு.குமாரசாமி, பொ.செல்லத்துரை, நகரசபை செயலாளர் வே.வசந்தகுமார் உட்பட பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .