2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

'காணிகள் பாதுகாக்கப்படுவது அவசியம்'

Kogilavani   / 2013 ஜனவரி 04 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


'மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி கருதி பொதுத்தேவைகளுக்காக காணிகளை பாதுகாப்பது அவசியமாகின்றது. மேலும் மக்களின் நலன் கருதி காணி அளவீடுகளை விரைவுபடுத்தி காணி ஆவணங்களும் குறுகிய காலத்திற்குள் வழங்கப்படவேண்டும்' என நாடாளுமன்ற உளுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணி பிணக்குகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடரந்தும் உரையாற்றிய அவர்,

'மாவட்டத்தில் காணி விடயங்கள் தொடர்பான செயற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இதேவேளை, அரச காணிகளில் அத்துமீறி குடியியேறியவர்களுக்கு காணி உரிமங்களை வழங்கும் செயற்பாடுகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இருப்பினும் அவற்றுக்கு அப்பாட்பட்ட பல காணி பிரச்சினைகளும் காணப்படுகின்றன. அதாவது தனியாருக்கு காணிகளை வழங்குதல் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு காணிகளை வழங்குதல் தொடர்பாக ஆராயப்பட வேண்டியுள்ளதுடன் மாவட்;டத்தின் எதிர்கால அபிவிருத்தியை கருத்தில் கொண்டு  பொதுத்தேவைகளுக்காக காணிகளை பாதுகாக்கும் விடயத்திலும் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளது.

இதனடிப்படையில் இச் செயற்பாடுகளை கையாள்வதற்கு சரியானதும் தீர்க்கமானதுமான முடிவுகள் எட்டப்பட்டு அதனடிப்படையில் காணி விடயங்களை  கையாளப்படவேண்டியது இன்று அவசியமாகின்றது.

இருப்பினும் தனியார் நிறுவனங்களுக்கு காணிகளை வழங்குவது தொடர்பாக பிரதேச செயலர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும் மாவட்டத்தினுள் நடைமுறையில் உள்ள காணிவழங்கும் செயற்பாட்டு விதிமுறைகளைக் கையாண்டு அவற்றை சீராக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்.

அத்தோடு அளவீடுசெய்யப்பட்ட காணிகளில் வாழும் மக்களுக்கு விரைவாக அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டும்.

நில அளவைத் திணைக்களத்தினர் துரிதமாக செயற்பட்டு ஏனைய காணிகளையும் அளவீடுசெய்ய வேண்டும். இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக வீட்டுத்திட்டங்களை பெறமுடியும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலன் போது, கிளிநொச்சி மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவர்களில் சுமார் 4370 குடும்பங்கள்  காணிகள் இன்றி
வசித்து வருகின்றமை வெளிக்கொணரப்பட்டது.

மேலும் இம் மாவட்டத்தில் 25,825 குடும்பங்கள் காணி ஆவணங்கள் இன்றி குடியிருக்கின்றனர். இவற்றுள்  கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேசசெயலகங்கள் உள்ளடங்குகின்றன.

இதில் காணி இன்றி கரைச்சிபிரதேச செயலகத்தில் 2700 குடும்பங்களும் கண்டாவளைப்பிரதேச செயலகத்தில் 1050 குடும்பங்களும் பூநரியில் 320 குடும்பங்களும் பச்சிலைப்பள்ளியில் 300 குடும்பங்களும் உள்ளன.

இதேவேளை இக்கலந்துரையாடலில் காணிகள் தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில்  கிளிநொச்சி மாவட்ட உதவி அரச அதிபர் தலைமைப் பணிமனை திருமதி ஜெயராணி, மாகாண உதவிக்காணி ஆணையாளர் மகேஸ்வரன், நில அளவைத் திணைக்களத்தின் சிரேஸ்ட நிலஅளவை அத்தியட்சகர் கல்தேரா, நில அளவை அத்தியட்சகர் சிவராசா மற்றும் பிரதேசசெயலர்களான முகுந்தன், நாகேஸ்வரன், சத்தியசீலன், வசந்தகுமார் ஆகியோரும் மாவட்ட காணிப்பதிவாளர் மணிவண்ணன் ஈபிடிபியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .