2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தமிழரின் அரசியல் அபிலாசைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக்கூடியவர் விக்னேஸ்வரன்

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்
 
தமிழ் மக்களது பிரச்சினைகளை சரியான முறையில் இனங்கண்டு மக்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆற்றல் மிக்கவரே சி.வி. விக்கினேஸ்வரன் என வவுனியா தமிழரசுக்கட்சி உறுப்பினரும், ஓமந்தை கமநல அபிவிருத்தி திணைக்கள தலைவரும், திடீர் மரண விசாரணை அதிகாரியுமான க.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,
 
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்கப்படவில்லை. மாறாக நில அபகரிப்பு, சிங்களமயமாக்கல் என பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்று வரும் அதேவேளை வடமாகாணசபை தேர்தலையும் அறிவித்துள்ளது.
 
தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வுக்கு இம் மாகாணசபை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி உலக நாடுகள் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில், எமது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் யாரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பது என்பது தொடர்பில் பல வாத, பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
 
உலக நாடுகளும் ஊடகங்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளர்களாக எமது தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, உயர் நீதிமன்ற முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்குள் இடம்பெற்ற பல்வேறு வாத, பிரதிவாதங்களுக்கு மத்தியில் சி.வி.விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவாகியுள்ளார்.
 
முதலமைச்சர் வேட்பாளர்களாக பரிந்துரைக்கப்பட்ட இருவரும் வெவ்வேறு துறைகளில் திறமையாக விளங்கியபோதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லக் கூடிய ஆற்றலும் சட்ட அனுபவமும் மிக்கவராக சி.வி.விக்கினேஸ்வரன் விளங்குகின்றார் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அரசியலில் பலவருட அனுபவம் வாய்ந்த முதிர்ந்த அரசியல்வாதியான எமது தலைவர் இரா.சம்மந்தனினால் தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளரே சி.வி.விக்கினேஸ்வரன் ஆவார்.
 
எனவே, இவரே முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதியானவர் ஆவார். எமது வவுனியா மாவட்ட மக்களும் அவரை ஏற்றுக்கொள்வதுடன் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் வவுனியா தமிழரசுக் கட்சி அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என வெளிவந்த கருத்துக்கள் எமது கட்சி உறுப்பினர்கள் சார்ந்த வகையில் வெளியிடப்படவில்லை. மாறாக தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் சில உறுப்பினர்கள் தன்னிச்சையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனவே, வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியினர் தமது கட்சியின் மூத்த உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது சுயநல போக்குடன் செயற்படுகின்றனர்.
 
எனவே, வவுனியா திழரசுக் கட்சியின் தற்போதைய நிர்வாகத்தை களைத்து புதிய நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் எமது கட்சியிக் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--