2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

செட்டிக்குளம் மகாவித்தியாலயத்திற்கு உதவிகளை வழங்கிய ஜனனம் அறக்கட்டளை

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


வவுனியா- செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் காணப்பட்ட ஆசிரியப் பற்றாக்குறை, மாணவர்களுக்கு தேவைப்பட்ட மேலதிகக் கல்வியை வழங்குவதில் காணப்பட்ட இன்னல்கள் ஆகியவற்றைத் துடைப்பதற்கு ஜனனம் அறக்கட்டளை முன்வந்து தனது உதவிகளை வழங்கியுள்ளது.
 
வவுனியா, செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதர, உயர்தர மாணவர்களில் மேலதிக கல்வி தேவைப்படும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை பாடசாலை மூலமே நடாத்தும் தேவை காணப்பட்டிருந்தது. எனினும் அதை நடாத்துவதற்குத் தேவைப்படும் மேலதிக பணத்திற்கான தேவை குறித்து ஜனனம் அறக்கட்டளைக்கு தெரியவந்திருந்தது.
 
இதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபரான தர்மரத்தினத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திய ஜனனம் அறக்கட்டளை, குறித்த மேலதிக வகுப்புக்களை நடாத்துவதற்குத் தேவைப்படும் பணத்தினை முழுமையாக வழங்க முன்வந்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஒருவருடத்திற்கான வகுப்புக்களுக்காக மாதத்திற்கு 40,000 ரூபா வீதம் வழங்குவதற்கு ஜனனம் அறக்கட்டளை தனது சம்மதத்தை வெளிப்படுத்தியுள்ளது.
 
அண்மையில் இடம்பெற்ற செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தின் க.பொ.த உயர்தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்விற்கான பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட வி.ஜனகன், இதற்காக அங்குவைத்து பாடசாலைச் சமூகத்தால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
 
இந்த நிகழ்வின் போது ஜனனம் அறக்கட்டளையின் பிரதான அறங்காவலரும், IDM Nations நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜனகன் விநாயகமூர்த்தி, யூனிவேர்சல் நெட்வேர்க்ஸ் நிறுவனத்தின் பொதுமுகாமையாளரும், ஜனனம் அறக்கட்டளையின் இணைப்பதிகாரியுமான சந்திரசேகரன் விமலச்சந்திரன், IDM நிறுவனத்தின் வடக்கு மாகாணத்திற்கான இணைப்பதிகாரி மயூரன், பாடசாலை அதிபர் தர்மரத்தினம் உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
 
இதன்போது ஜனனம் அறக்கட்டளையின் சிறப்பான நடவடிக்கைகளுக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் தங்களது நன்றிகளைத் தெரிவித்திருந்ததோடு, எதிர்காலத்திலும் ஜனனம் அறக்கட்டளையின் உதவிகள் தங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்திருந்தனர்.
 
வவுனியா - செட்டிக்குளம் மகாவித்தியாலயத்திற்கும், வி.ஜனகனிற்குமிடையில் நேரடியான தொடர்புகள் எவையும் இல்லாதபோதிலும், தங்களது குறைகளை வெளிப்படுத்தியதும் பாடசாலைக்கு உதவிகளை வழங்கிய வி.ஜனகனிற்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும், அவரது இந்த நடவடிக்கை இளைஞர்கள் பாடசாலைக்கு உதவுவதற்கு மேலும் வழிவகுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இங்கு அதிபர் தெரிவித்தார்.
 
இதில் கருத்துத் தெரிவித்த ஜனனம் அறக்கட்டளையின் பிரதம அறங்காவலர் ஜனகன் விநாயகமூர்த்தி, கடந்த காலங்களில் இருந்ததைப் போன்று, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கின் கல்வி, விளையாட்டு அபிவிருத்திகளுக்கு ஜனனம் அறக்கட்டளை தன்னாலான பணிகளைச் செய்யவரும் எனக் குறிப்பிட்டார். செட்டிக்குளம் மகாவித்தியாலயம் போரினால் நேரடியான பாதிப்புகளைச் சந்தித்திருக்காதபோதிலும், ஏனைய எல்லா வடக்குப் பாடசாலைகள் போன்றும் அக்கல்லூரி மறைமுகமாக ஏராளமான பாதிப்புக்களைச் சந்தித்திருந்தது என்பதை அனைவரும் அறிவர் எனவும் அவர் கூறினார்.
 
ஜனனம் அறக்கட்டளையின் உதவிகளை நாடி ஏராளமான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், அக்கோரிக்கைகள் தொடர்பாக முழுமையாக ஆராயப்பட்டு, உள்ளக அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு, அதன் பின்னரே உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனக் குறிப்பிட்ட வி.ஜனகன், உதவிகள் வழங்கப்பட்ட பின்னரும் அவ்வுதவிகள் மாணவர்களுக்குச் சரியான முறையில் சென்றடைகின்றனவா, உதவிகள் மூலம் மாணவர்கள் சரியான பலனைப் பெறுகிறார்களா என்பதை ஜனனம் அறக்கட்டளை தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--