2021 மே 15, சனிக்கிழமை

மன்னாரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

George   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தம் அனுக்ஸன்(வயது-22) என்ற இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரியும் மன்னார் பொது வைத்தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக் கோரியும் நொச்சிக்குளம் கிராம மக்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம், செவ்வாய்க்கிழமை(3) காலை மன்னாரில் இடம் பெற்றது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அதன் உப தலைவர் அந்தோனி சகாயம் தலைமையில் இடம் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது இடம் பெற்றது.

மன்னார் பொது விளையாட்டு மைதான பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது.

மன்னார் பொது வைத்தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நோக்கி ஆர்பாட்டக்காரர்கள் சென்றனர்.

இதன் போது மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த 29ஆம் திகதி அதிகாலை யாழ். வைத்தியசாலையில் உயிரிழந்த மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தம் அனுக்ஸன்(வயது-22) என்ற இளைஞனின் கண்ணீர் அஞ்சலி பதாதைகளையும் ஏந்தியவாறு சென்றனர். 

மன்னார் வைத்தியசாலையில் உள்ள அதிகாரிகள் மக்களுடன் நடந்து கொள்ளும் முறை, நோயாளர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படாமை உயிரிழந்த அனுக்சனின் நிலை தொடர்பில் இறுதி வரை எவ்வித பதிலும் வழங்கப்படாமை, உரிய நேரத்தில் அம்பியுலன்ஸ் சேவைகள் இடம் பெறாமை, வைத்தியர்கள் சிலர் வைத்திய சாலையில் சிகிச்சை வழங்காது தமது தனியார் வைத்திய நிலையங்களில் சிகிச்சை வழங்குகின்றமை என பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் மற்றும்,வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் வழங்கும் முகமாக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா அவர்களிடம் மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அந்தோனி சகாயத்தினால் மகஜர் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அந்தோனி சகாயம், பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் ஒன்றிணைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரூபன் லெம்பேட் அவர்களிடமும் மகஜர் கையளித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரூபன் லெம்பேட் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,

வைத்தியசாலையின் கவனயீனத்தினால் நோயாளி ஒருவருடைய உயிர் பலியாகியது என கோரி உயிரிழந்தவரின் தாய் உறவினர்கள், பிரமுகர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் என்னிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரில் குறிப்பிட்டுள்ளதன் படி குறித்த இளைஞரின் மரணத்திற்கு மன்னார் வைத்தியசாலை மற்றும் அதிகாரிகள் காரணமாக இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரஜைகள் குழு என்பது முக்கியமான அமைப்பு. மன்னார் மாவட்டத்தில் சமூக, கலாசாரம் தொடர்பான பிரச்சினைகளை கையாலும் அமைப்பு. இப்பிரச்சினை தொடர்பில் என்னிடம் வந்து கதைத்து முடிவெடுத்திருக்க முடியும்.

அதனை விடுத்து ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளனர். இதனால் ஆரோக்கியமாக எதும் கிடைக்கப்போவதில்லை. இருந்தும் குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்  தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .