2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியின் புறக்கணிப்பே, எமக்கு கிடைத்த பரிசு: சிற்றம்பலம்

Gavitha   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்


நல்லிணக்கத்தை வெளிக்காட்ட சென்றோருக்கு, மைத்திரி அரசு வழங்கிய பரிசு, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியின் புறக்கணிப்பே என்று தமிழரசுக்கட்சியின் துணைத்தலைவர் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் நியமனம் தொடர்பில் அவரிடம் இன்று (08) வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,


'கிழக்கு மாகாண சபையில் 11 உறுப்பினர்களை கொண்டும் சனத்தொகையில் முஸ்லீம்களை விட கூடிய வகிதாசாரத்தையும் கொண்டதுமான தமிழ் மக்களை பிரதிநிதிபடுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க, ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பலவாறு பேசியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் கிடைத்தது பலத்த ஏமாற்றமேயாகும்.


இச்சந்தர்ப்பத்தில் தான், நல்லிணக்க சமிச்ஞையை வெளிக்காட்டுவதற்கே 67ஆவது சுதந்திரதின விழாவில் கலந்துகொண்டோம் என்று இரா சம்பந்தனதும் எம். ஏ. சுமந்திரனதும் சொல்;லிவருவது சிந்திக்க வேண்டியுள்ளது.
தமிழ் மக்கள் விடயத்தில் மைத்திரி அரசு இதுவரை ஆக்கபூர்வமான எந்த செயற்பாடையும் எடுக்கவில்லை என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா புலம்புகின்றார். ஆதலால் நல்லிணக்க சமிக்ஞையை வெளிக்காட்ட சென்றோருக்கு மைத்திரி அரசு பரிசாக அளித்த நல்லிணக்க பரிசுகள் பல.


அந்த பரிசுகளில், சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்று வந்த சில மணி நேரத்தில் ஓமந்தை சோதனை சாவடியில் மீண்டும் சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமையும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் முதலமைச்சரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை புறக்கணித்து நியமித்தமையும் உள்ளடங்குகின்றது.


இது மட்டுமன்றி முஸ்லீம்களோடு நல்லிணக்கம் பேண வேண்டும் என,  வடக்கு கிழக்கில் இருந்து முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றியமை இனச்சுத்திகரிபே என சட்டவாதம் பேசும் சுமந்திரனின் இராஜதந்திரத்துக்கும் கிடைத்த பலத்த அடியாகும்.


2009இல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரின் போது,  இனச்சுத்திகரிப்பு நடைபெற்றதை மறுக்கும் சுமந்திரன், முஸ்லீம்களுக்கு எதுவித தீங்கும் இழைக்காது வெளியேற்றியமையை இனச்சுத்திகரிப்பு என வாதிடுவது விதண்டாவாதமாகும். இவ்வாறு நான் தெரிவிப்பது முஸ்லீம்களை, விடுதலைப்புலிகள் வெளியேற்றியமை சரி என்று கூறுவதற்கல்ல.


நல்லிணக்க சமிக்ஞையை வெளிக்காட்ட குடும்பத்துடன் சென்று கலந்துகொண்டமை மிக மிக வேடிக்கையானதாகும். இந்நிகழ்வுகளில் கலந்து கூடிக்குலாவியவர்களுக்கு எமது போராட்டத்தின் வடுக்களோ அன்றி பல்லாண்டு காலமாக சிறையில் வாடும் நம்மவர் பற்றியோ, அங்கவீனமானவர்கள் பற்றியோ, விதவைகள் பற்றியோ, இன்றுவரை  எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கையும் எடுக்காத அரசின் அக்கறையின்மையை விளங்கி கொள்ளாதது வேதனையளிக்கின்றது.


இவர்கள் எமது போராட்ட காலத்தில் மக்களோடு வாழாது, அதன் வடுக்களை சுமக்காது இருந்தவர்கள். தற்போது சர்வதேச விசாரணையையும் மழுங்கடிக்க செய்துள்ளார்கள்' என அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X