2021 மே 08, சனிக்கிழமை

இனவாதிகளின் பொய் வார்த்தைகளுக்கு எமது மக்கள் ஏமாறமாட்டார்கள்: றிஷாட்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனவாதிகளின் பொய் வார்த்தைகளுக்கு எமது மக்கள் ஏமாறமாட்டார்கள் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  றிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
 
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற செய்யும் போராட்டத்தில் சிறுபான்மை மக்கள் எவ்வாறு ஒன்றுபட்டு செயற்பட்டார்களோ, அதே ஒற்றுமையில் நாம் தொடர்ந்தும் உறுதியாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவு தொடர்பில் எமது கட்சிக்கு எதிராக சிலர் பொய் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர்.

பொதுஜன ஜக்கிய முன்னணியில் நாம் அங்கத்துவம் வகித்த போது, அடுத்த முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருந்தோம்.

சிலர் சுயநலத்துக்காகவும் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் எமது கட்சிக்கு எதிராக பேசுகின்றனர். சிலர் இந்த மண்ணில் இனவாதம் பேசி மீண்டும் எமது இனங்களை பிரித்து, மக்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவிப்பது அவர்கள் எண்ணம். அதற்கு எமது வன்னி மாவட்ட மக்கள் ஒரு போதும் இடங்கொடுக்கமாட்டார்கள்.

இந்த மண்ணில் எந்த சமூகத்தையும், பிரித்து அவர்களை ஒடுக்கும் நடவடிக்கைக்கு எவருக்கும் இடமளிக்க போவதில்லை. இந்த அரசாங்கத்தில் எமது கட்சி மிகவும் பலமுள்ளதாக இருக்கின்றது என்பதற்கு போதுமான ஆதாரங்களை நாம் கூறலாம்.

எமது கட்சியின் பலத்தை அறிந்து கொண்டவர்கள் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை, மாகாண சபை உறுப்பினர்;களை விலைபேசி அவர்களுக்கு அமைச்சு பதவிகளை தருவதாக பொய்கூறி அவர்களை வாங்கும் அளவுக்கு மாறியுள்ளனர். ஆனால் நாங்கள் ஒரு போதும் அவ்வாறான வர்த்தக அரசியலை செய்யப்போவதில்லை. இந்த நாட்டு மக்கள் எம்மீது கொண்ட உண்மையான நம்பிக்கையை நாங்கள் பாதுகாப்போம்.

எமது கட்சி இந்த நாட்டு மக்களின் விமோசனத்துக்காக உருவாக்கப்பட்டது. இந்த உருவாக்கத்தின் பின்னணியில் இருப்பவர்கள் ஏழைகளும், தியாகிகளும் என்பதை எம்மால் மறந்துவிட முடியாது. அதே போல் இந்த வன்னி மாவட்டத்தில் வாழும், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் தியாகமும் இந்த வளர்;ச்சிக்கு காரணமாகும்.

கடந்த அரசாங்கத்தில் இருந்து இந்த மக்களுக்கு செய்த அபிவிருத்திகளை விட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் அதைவிட ஒரு மடங்கு அதிகமான பணிகளை நாம் செய்வோம் என்றார்.

இன்று ஒரு சிலர் எமக்கு எதிராக சதி செய்கின்றார்கள், அதற்கு ஊடகங்களையும் பயன்படுத்துகின்றார்கள். நீங்கள் எந்த ஊடகத்தையும் பயன்படுத்துங்கள், அல்லாஹ்வின் ஏற்பாடு இன்றி நீங்கள் எதை செய்தாலும் அது பலிக்காது என்கின்ற ஆழ்ந்த நம்பிக்கையை நாங்கள் கொண்டவர்கள்.

கிழக்கில் முஸ்லீம் ஒருவர் முதலமைச்சராக இருப்பதே நியாயமானது

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்-முஸ்லிம் உறவில் விரிசலையேற்படுத்த சிலர் செயற்பட்டனர். கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயமானது.

மக்களின் வாக்குகளை பெற்றுவிட்டு மக்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் தொடர்பில் அடுத்த தேர்தலில் மக்கள் நல்ல பாடத்தை அவர்களுக்கு புகட்டுவார்கள் என சொல்லி வைக்கவிரும்புகின்றேன்.

எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், வன்னி, குருநாகல், அநுராதபுரம், கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது.

இந்த தேர்தலில் 10க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்று நாடாளுமன்றில் மூன்றாவது சக்தியாக நாம் எம்மை நிலைநிறுத்துவோம். ஆட்சி அமைக்கும் அரசாங்கத்துடன் பேரம்பேசி வடக்குக்கு மட்டுமல்லாது முழு நாட்டுக்கும் எமது பணிகளை தொடர்வோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X