2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

வன்னி மக்களுக்கு விடிவுகாலம் நெருங்கிவிட்டது: ரிஷாட்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

'வன்னி மக்களைப் பொறுத்தவரை என்றுமில்லாத அளவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கடந்த கால உள்நாட்டுப் போரினால் சீரழிந்து சின்னாபின்னமாகியிருக்கும் நம் வாழ்வைச் சீராக்கிச் செப்பனிட வேண்டிய தேவைப்பாடு இருப்பதால், இந்தத் தேர்தலில் நாம் மிக நிதானத்துடன் சிந்தித்து செயற்பட வேண்டி இருக்கிறது. அதற்காக நாம், வாக்குகளை எதிர்பார்த்து மக்களுக்காக பணியாற்றவில்லை' என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் நகர மற்றும் பிரதேச சபைகளின் நிர்வாகங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் இருந்தன. அவர்கள் அதனை வைத்துக்கொண்டு எதையும் செய்யவில்லை. இவ்வாறானதொரு நிலையில், வன்னி மாவட்டத்தில் எமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரித்து இரண்டு வருட காலத்துக்குள் மன்னார் நகரினை சிறந்ததொரு அழகுமிகு நகரமாக மாற்றும் திட்டம் எம்மிடம் உள்ளது எனவும் அவர் கூறினார்.

மன்னார், பேசாலையில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அபிவிருத்திகள் என்று வருகின்ற போது அதனை நாம் எல்லோருக்கும் பெற்றுக்கொடுத்துள்ளோம். வாக்குகளை மட்டும் மையமாக கொண்டு நாம் எந்தப் பணியினையும் செய்வதில்லை,மாறாக எமது மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி நிலை என்பன உயர வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனேயே நாம் இவற்றை செய்கின்றோம்' என்றார்.

'எம்முடன் இணைந்து தமிழ் மக்கள் பணியாற்றுகின்ற போது அவர்களை பார்த்து துரோகிகள் என்று சொல்கின்றனர். மக்களது தேவை என்பதை நாம் இனம் கண்டதினால் தான், வீடமைப்புத் திட்டங்கள், அரச நியமனங்கள் உள்ளிட்ட இன்னும் எத்தனையோ நியமனங்களை தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளோம்.

மதவாச்சி - தலைமன்னார் புகையிரத சேவை, மதவாச்சி - மன்னார் பாதை புனரமைப்பு, தலைமன்னார் -இராமேஸ்வரத்துக்கான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் இந்த பிரதேசம் அபிவிருத்தி காணும். மேலும் பல ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் உருவாகும். இவ்வாறு உருவாகின்ற போது அவற்றை நீங்கள் அனுபவிக்கமால் தவரவிட்டுவிட்டு எதனை செய்யப் போகின்றீர்கள்' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .