2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

‘பிரச்சினைகள் தீரவில்லை’

Editorial   / 2017 ஜூலை 08 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“யுத்தம் நிறைவடைந்தது. ஆனால், பிரச்சினைகள் தீரவில்லை. பயங்கரவாதம் மட்டுமே முற்றுப்பெற்றுள்ளது. இனவாதம் இன்னும் அதிகரித்துள்ளது” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும், மன்னாரில் நீர் பிரச்சினை காணப்படுவது போல் யாழ்ப்பாணத்திலும் காணப்படுகின்றது. அங்கு நீரை விநியோகிப்பதற்கான புதிய செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மன்னார் - எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை, நேற்று (07) மாலை திறந்து வைத்து உரையாற்றகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய நிதி உதவியை வழங்கி வருகின்றது.

“இந்த நீரை விநியோகிப்பதன் மூலம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மன்னார் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு பாரிய அடிப்படையாக அமைந்துள்ளது.

“இந்தப் பிரதேசத்தில், அவர் எதிர்பார்ப்பது போல் பாரிய பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மே மாதம் மன்னார் வந்து மாவட்டச் செயலகத்தை திறந்து வைத்தேன். நாம் இங்குள்ள பழைய கட்டடங்களை எடுத்து அதனை உள்ளாச பயணத்துறைக்கு பயன்படுத்துவதற்கு பேச்சு வார்ததைகளை முன்னெடுத்துவருகின்றோம்.

“இங்கு தற்போது நீர் வசதி உள்ளமையினால், நல்ல முதலீட்டாளர்களை தேடிக்கொள்ள வேண்டும்.

“மன்னார், வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம், தம்புள்ளை போன்ற பிரதேசங்களை இணைத்து பாரிய இணைப்பு திட்டங்களுக்கு உதவுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

“தற்போது, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், இரணை மடு திட்டம் போல் பூநகரி நகரத்தையும் பாரிய அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு ஏற்படும்.

“யாழ்ப்பாணத்தில் இருந்து புநகரி பிரதேசத்துக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுப்பதற்கு வய்ப்பாக அமையும். அதே போல், கடற்கரை பிரதேசமான இங்கு நல்ல வளம் இருக்கின்றது. அதனை நாங்கள் உல்லாசப் பயணத்துறைக்கு மாற்றி அமைக்கலாம்.

“மன்னார், காங்கேசந்துறை மற்றும் தீவுப்பகுதிகளுக்கான படகு சேவை போக்குவரத்து வசதிகளினூடாக நாங்கள் இந்தத் துறையை மேம்படுத்த முடியும்.

“பரந்தன் போன்ற பகுதிகளில் கைத்தொழில் போட்டைகளை அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

“அந்தத் திட்டங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். யுத்தத்தினால் பொருளாதாரம் முற்று முழுதாக அழிந்தொழிந்தது. நாம் அந்த பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

“ஆனால், பொருளாதாரத்தை மாத்திரம் கட்டியெழுப்பி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. யுத்தம் இனவாதத்தினால் ஏற்பட்டது. அதனால், பயங்கரவாதம் உருவானது. அதனால் பிரிவினைவாதமும் உருவானது. இதற்கு நாம் தீர்வு காண வேண்டியுள்ளது.

“யுத்தம் நிறைவடைந்தது. ஆனால், பிரச்சினைகள் தீரவில்லை. பயங்கரவாதம் மட்டுமே முற்றுப்பெற்றுள்ளது. இனவாதம் இன்னும் அதிகரித்துள்ளது. அதனால்தான் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுடன் இணைந்து நாங்கள் திறந்த மனதுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தி, முற்று முழுதாக எல்லோரும் ஏகோபித்த வகையில் குறித்த பிரச்சினைகளைத் தீர்வுக்கு கொண்டு வர வேண்டும் இதனை இழுத்தடிக்க முடியாது என்று முடிவுக்கு வந்தோம்.

“அமைச்சர்களான  ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பல கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

“இதனால் ஜனாதிபதி வேட்பாளராக ஒரு பொது வேட்பாளரை நாங்கள் நியமிக்க தீர்மானித்தோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினோம்.

“நாங்கள் அதன் மூலமாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தோம். அவர் தனது உயிரை பணயம் வைத்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

“தேர்தலில் அவர் வெற்றி பெற்று ஜனாதிபதியான பின்னர் நாடாளுமன்றத்தை நாங்கள் உருவாக்கிக்கொண்டதன் பின்னர், தற்போது நாங்கள் இனங்களுக்கிடையிலான சக வாழ்வு, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

“உலகம் அதற்கு உதவத்தயாராக இருக்கின்றது. ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகள் நமக்கு உதவக் காத்திருக்கின்றன.

“நாமும் அதனுடன் இணைந்து முன்னே செல்ல வேண்டியுள்ளது. நாங்கள் அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்ளுவதற்கு யாப்பொன்றை உருவாக்க வேண்டியுள்ளது.

“நாடாளுமன்றத்தை நாங்கள் அதற்கேற்ற இடமாக பரிவர்த்தனை அடையச் செய்ய வேண்டும். அது மக்களுடைய வேண்டுகோள். அபிலாசைகளின் மூலம் அவர்களுடைய வரம் மூலமாக பெற்றுக்கொண்டோம்.

“அதன் மூலம் அரசியல் யாப்பொன்றை உருவாக்கி அரசியல் பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு நாட்டின் அபிவிருத்தியை நோக்கி செல்ல வேண்டியுள்ளது.

“அதற்கு மக்களுடைய ஆணை எமக்கு கிடைத்துள்ளது. சகல இன மக்களும் அதற்கான அங்கிகாரத்தை எமக்கு வழங்கினார்கள். ஆண்கள், பெண்கள் என அதிகலவானவர்கள் அதற்க ஆதரவு வழங்கியுள்ளனர்.

“எனவே, அதற்கு நாங்கள் எதிரிகளாக முடியாது. அந்த ஆணையை எடுத்துக்கொண்டு நாங்கள் முன்னால் செல்கின்றோம்.

இந்த அரசியல் யாப்பை நாங்கள் உருவாக்குகின்றோம். அதனை புதிய முறையிலே உருவாக்கிக் கொண்டு செல்கின்றோம்” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .