2020 நவம்பர் 25, புதன்கிழமை

முல்லைத்தீவில் மீனவர்களால் மீண்டும் போராட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவில், தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சுருக்குவலைப் பயன்பாட்டு அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்டக் கடற்றொழில் திணைக்களத்துக்கு முன்னால் போராட்டமொன்று நாளை(17) முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு - கள்ளப்பாடு, அந்தோனியார் தேவாலயத்தில், நேற்று (15) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்போது, வாயில் கறுப்புத் து​ணியைக் கட்டியவாறு, அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

முல்லைத்தீவில், சட்டவிரோத மின்பிடி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மீனவர்களால், கடந்த மாதம் 2ஆம் திகதியன்று, பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்து, 12ஆம் திகதியன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த மீன்பிடித்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, சட்டவிரோத மீன்பி​டி நடவடிக்கைகளுக்குத் தடைவிதித்தார்.

அமைச்சரின் இந்தத் தடையுத்தரவை அடுத்து, முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது ஆறு வாரங்களுக்கு மாத்திரம், தற்காலிகமாக, சட்டவிரோத சுருக்குவலைப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் கிடைத்தவுடன், முல்லைத்தீவு கடற்பரப்பில், மீண்டும் சட்டவிரோதத் தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலைமையை அடுத்து, முல்லைத்தீவு மீனவர்கள் சுமார் நூறு பேர் ஒன்றுகூடி, இது தொடர்பான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டனர். இந்தக் கலந்தரையாடலில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனு கலந்துகொண்டார்.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழில் திணைக்களத்துக்கு முன்பாக, வாயில் கறுப்பு துணியைக் கட்டி அமைதியான முறையில் எதிர்ப்புப் ​போராட்டமொன்றை முன்னெடுக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .