2024 மே 03, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் விகாரைக்கு கலசம்

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு, இன்று (27), காலை 6.15 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, குறித்த பல்கலைக்கழக வளாகத்தில், ஏனைய வணக்கஸ்தலங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நான்கு வணக்கஸ்தலங்கள் அமைப்பதற்கு தலா ஒரு ஏக்கர் காணி வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏனைய வணக்கஸ்தலங்களை அமைப்பதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் இன்று வரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லையென, பல்கலைக்கழக சமூகத்தால் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு வணக்கஸ்தலங்களும் சம அளவு உயரத்தைக் கொண்டதாக அமைய வேண்டும் என்பது பல்கலைக்கழகத்தின் ஏற்பாடாகும்.

இந்த நிலையில், இந்து வணக்கஸ்தலம் அமைப்பதற்கு எவ்வகையான தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படாததாலும் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் கோவிலைக் கட்டுவதற்கான இழுபறி நிலை காணப்படுகின்றமையாலுமே, குறித்த வணக்கஸ்தலம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கிறிஸ்தவ வணக்கஸ்தலம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை கத்தோலிக்க மறைமாவட்டம் செய்திருந்தது.

குறித்த ஏற்பாடுகளில் ஏற்பட்ட தாமதம் தொடர்பிலும் பொதுவான நிலைப்பாடு எடுப்பது தொடர்பிலும், தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண. கலாநிதி டேனியல் செ.தியாகராஜா, பல்கலைக்கழகப் பீடாதிபதி ஏ.அற்புதராஜாவுடன் பேசியிருந்தார்.

எனினும், குறித்த வணக்கஸ்தலத்துக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், கிறிஸ்தவ வணக்கஸ்தலத்தை பொது வழிபாட்டுக்கமைவாக நிர்மாணிப்பதற்கு தென்னிந்திய திருச்சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கமென, பேராயர் தெரிவித்திருந்தார்.

அதேபோன்று, இஸ்லாமிய வணக்க ஸ்தலத்தை அமைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பௌத்த மாணவர்களின் முயற்சியாலும் சமயம் சார்ந்தவர்களின் செயற்பாடுகளாலும், விகாரை அமைக்கப்பட்டு, கலசம் வைக்கும் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .