2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

தம்மை நிரூபித்துக் காட்டியது பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 18 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இங்கிலாந்து மண்ணிலிருந்து பாகிஸ்தான் அணி, இறுதியாகப் புறப்பட்டபோது, அவமானங்களைச் சுமந்துகொண்டு, தமது மரியாதையையும் நற்பெயரையும் இழந்த அணியாகவே, பாகிஸ்தானுக்குச் சென்றடைந்தது. ஆனால், திரும்ப அந்நாட்டுக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி, தமது அவமானத்திலிருந்து உச்சநிலைப் புகழைப் பெற்றுக் கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றதைத் தொடர்ந்தே, பாகிஸ்தான் அணிக்குப் இப்புகழ் ஏற்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு இடம்பெற்ற இரு அணிகளுக்குமிடையிலான தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி, இதே லோர்ட்ஸ் மைதானத்திலேயே இடம்பெற்றது. அப்போட்டியில் மொஹமட் ஆமிர், மொஹமட் ஆசிப் இருவரும், அணித்தலைவர் சல்மான் பட்டின் வழிகாட்டலில், பணத்தைப் பெற்றுக் கொண்டு, முறையற்ற பந்துகளை வீசியிருந்தமை, போட்டி இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது வெளிப்படுத்தப்பட்டது. மிகுந்த அவமானத்துடன், நாட்டின் பெயரைச் சீரழித்த குற்றவுணர்ச்சியுடன், தலைகுனிந்தவாறு, பாகிஸ்தான் வீரர்கள் சென்றனர்.

"பாகிஸ்தானிய கிரிக்கெட்டுக்கு, அவமானகரமான நாள்" என, பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் ஆமிர் சொஹைல் அதை விளித்தார். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு மொஹமட் ஆமிருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதோடு, 6 மாதங்களுக்குச் சிறையிலடைக்கப்பட்டார். தடை விதிக்கப்பட்ட சல்மான் பட்டுக்குப் பதிலாக, அணித்தலைவராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார். இழந்த நற்பெயரை மாத்திரமன்றி, முக்கிய வீரர்கள் மூவரில்லாமல், அணியொன்றைக் கட்டியெழுப்பும் பொறுப்பு, மிஸ்பாவுக்கு வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி ஓரளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்தியே வந்தது. அவ்வணியின் புதிய நட்சத்திரப் பந்துவீச்சாளராக, யாசீர் ஷா மாறினார். ஆனால் திடீரென, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பாவனையில் சிக்கிய ஷா, 3 மாதங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறார்.

அடுத்ததாக, பாகிஸ்தானின் புதிய பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ள மிக்கி ஆர்தர், அவுஸ்திரேலியப் பயிற்றுநராக இருந்தபோது, 2013ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்துக்குச் சென்றார். மாபெரும் தொடரான ஆஷஸ் தொடருக்கு 2 வாரங்கள் முன்னதாக, இங்கிலாந்தில் வைத்து, முன்னறிவித்தல்களின்றிப் பதவி நீக்கப்படுகிறார் ஆர்தர். தொழில்ரீதியான விளையாட்டுக்களில், அவுஸ்திரேலியர்கள் காட்டும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத முடிவாக அது அமைந்தது. தலைகுனிவுடனும் ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் கவலையுடனும் வீட்டுக்குச் செல்கிறார் ஆர்தர்.

ஸ்பொட் பிக்சிங் இடம்பெற்று ஏறத்தாழ 6 ஆண்டுகளின் பின்னர், இங்கிலாந்துக்கான அடுத்த தொடரை பாகிஸ்தான் மேற்கொண்டது. அந்தத் தொடரின் முதலாவது போட்டியே லோர்ட்ஸில். இது போதாதென்று, டெஸ்ட் போட்டிகளில் தனது மீள்வருகையை, தடைக்காலத்தைப் பூர்த்திசெய்த மொஹமட் ஆமிர் மேற்கொண்டார். ஊக்கமருந்துப் பாவனைத் தடையின் பின்னரான மீள்வருகையை, யாசீர் ஷா மேற்கொண்டார். தான் பதவி விலக்கப்பட்ட அதே நாட்டுக்கு, பயிற்றுநராகத் திரும்புகிறார் ஆர்தர். மிஸ்பா உல் ஹக்குக்கோ, வயது 42. ஏராளமான அழுத்தங்கள்.

அவ்வளவு அழுத்தங்களையும் எதிர்பார்ப்புகளையும் சிறப்பாக எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியை இங்கிலாந்தில் வைத்து, பந்தாடியிருக்கிறது பாகிஸ்தான். அவ்வப்போது சிறப்பான ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தினாலும், போட்டியின் பெரும்பாலான நேரங்களில், தனது உச்ச திறமையை வெளிப்படுத்தியிருந்தது பாகிஸ்தான். அத்தோடு, தன்னையும் தனது நாட்டையும் அவமானத்துக்கு உள்ளாக்கிய அதே மைதானத்தில், தனது மீள்வருகையின்போது, அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இறுதி விக்கெட்டை ஆமிர் கைப்பற்றியமை, இன்னமும் சிறப்பானதும் பொருத்தமானதுமாக அமைந்துகொண்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .