2020 ஜூன் 04, வியாழக்கிழமை

கொரில்லா குட்டிகள்

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ருவாண்டாவின் பாராம்பரியத்தின் ஒரு பகுதி

அருகிவரும் கொரில்லாக்களை பாதுகாப்பதற்கு, ருவாண்டா அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதில், கொரில்லாக்களுக்கு பெயர் சூட்டும் விழா, ருவாண்டாவின் கலாசாரத்தின் கீழ், பல நூற்றாண்டுகளாக, ஒரு விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், ஒவ்வொரு வருடமும், கொரில்லா குழந்தைகளுக்கான பெயர் சூட்டும் விழா, செப்டெம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகின்றது. இம்முறையும், இந்த விழா, ​ருவாண்டாவில் நடைபெற்றிருந்தது.

க்விடா இசினா என்று அழைக்கப்படும் புதிதாக பிறந்த கொரில்லாக்களுக்கு இந்தப் பெயர் சூட்டு விழாவில் இம்முறையும்,  மலைசார்ந்த பகுதிகளில் வசிக்கும்  கொரில்லா குட்டிகளுக்கு பெயர் சூட்டப்பட்டது. இந்நிகழ்வுக்கு, இலங்கையின் பிரபல தொழிலதிபரும் மனிதவினப் பற்றாளரும் விலங்கு உரிமை வழக்கறிஞருமான ஒட்டாரா குணவர்தன, கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். கொரில்லா குட்டிகளுக்கு, உலகெங்கிலும் உள்ள  பாதுகாப்பு, வணிகம், விளையாட்டு, பேஷன் உள்ளிட்ட பல பிரபல வணிக நாமங்களைக் கொண்டுள்ளவர்களே பெயர்களைச் சூட்டி வருகின்றனர்.

ருவாண்டா அரசாங்கம், ருவாண்டா மேம்பாட்டு வாரியம் மூலம் அருகிவரும் மலை கொரில்லாக்களை பாதுகாப்பதில், பெரும் வெற்றி கண்டிருந்ததையடுத்து, இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை, 2005ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகின்றது. அத்துடன், ருவாண்டா அரசாங்கம், விலங்குகளின் இயற்கை வாழ்விடங்களை பாதுகாப்பதில், விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகின்றது.

கொரில்லா குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழாவொன்று அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், வனத்துறையினர், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரே, கொரில்லாக்களுக்கு பெயர் சூட்டி வந்தனர். 1970களில், கொரில்லாக்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அமெரிக்காவின் விலங்கியல் நிபுணரும் விலங்கு பாதுகாவலருமான மறைந்த டொக்டர் டியான் ஃபோஸி, ஒவ்வொரு கொரில்லாக்கள் பற்றி நன்கு அறிந்த பின்னர், அவைக்கு பெயர்களைச் சூட்டி வந்தார்.

எனினும் இம்முறை, ருவாண்டாவின் முசன்சே மாவட்டத்தின் கினிகி பகுதியில் உள்ள எரிமலை தேசிய பூங்காவின் அடிவாரத்தில் நடைபெற்ற, ருவாண்டாவின் 15ஆவது க்விடா இசினா பெயர்சூட்டு விழாவில், ருவாண்டாவிலுள்ள ஆயிரக்கணக்கானோரும் உலகளாவிய ரீதியிலுள்ள விலங்கியல் பாதுகாப்பாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். விலங்கினங்களைப் பாதுகாக்கும் ருவாண்டா அரசாங்கத்தின் விழிப்புணர்வை நோக்காகக் கொண்டே, இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகளாவிய ரீதியில் இருந்து 1,000 விசேட அதிதிகளும் 4,000 விருந்தினர்களும் ருவாண்டா சமூகத்தின் 3,000 பேரும், இதில் கலந்துகொண்டிருந்தனர்.

கொரில்லாக்களுக்கு பெயர் வைப்பதற்காக வந்திருந்த அனைத்து கௌரவ பிரதிநிதிகளுக்கும் மலையேறவும் அங்குள்ள கொரில்லா குடும்பங்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

ஒரு வாரகாலமாக நடந்த இந்நிகழ்வின் போது, விலங்கினம் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு நடவடிக்கைகள், கல்விக் கண்காட்சி உள்ளிட்ட சமூக திட்டங்கள் என பல நடைபெற்றிருந்தன. இலங்கையின் எம்பார்க், ஒட்டாரா அறக்கட்டளை ஆகிய தனது தொண்டு நிறுவனங்களூடாக, ஒட்டாரா குணவர்தன மேற்கொண்டு வரும் விலங்கினங்களுக்கான சேவைக்காக, அவருக்கு இந்த விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஒட்டாரா குணவர்த்ன, ருவாண்டா மேம்பாட்டு வாரியத்தால் தனக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்தார்.

ருவாண்டாவின் ஃபஸ்ட் லேடிஸ் இம்புட்டோ அறக்கட்டறையின் உள்ளூர் தொழில்முனைவோருக்கான நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காக, கடந்த வருடம் வந்திருந்தபோது, ருவாண்டா அரசாங்கத்தால் கொரில்லாக்களை பாதுகாப்பதற்கான எடுக்கப்படும் நடவடிக்கையில் தான் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த அற்புதமான கொரில்லா இனத்தின் 99 சதவீதமான மரபணுக்கள், மனித இனத்துடனேயே ஒத்துப்போவதாகவும் ஆனால், மனிதர்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் காரணமாக, அவை அழிந்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில், ருவாண்டா அரசாங்கத்தாலும் ஜனாதிபதியாலும் முன்னெடுக்கப்படும் இந்தப் பாதுகாப்புச் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது என்றும் வனவிலங்கு ஆர்வலராகவும் பாதுகாவராகவும் இருக்கும் தனக்கு, கொரில்லாக்களை பாதுகாப்பதற்கான ருவாண்டா அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒரு பகுதியாக இருப்பதற்கு வாய்ப்பளித்தமையை எண்ணி பெருமையடைவதாகவும் கூறினார்.

இந்த வருடத்துக்கான கொரில்லா குட்டிகளுக்கானப் பெயர் சூட்டு விழாவில், 25 குழந்தை கொரில்லாக்களுக்கு பெயர் சூட்டப்பட்டன. அமஹோரோ, உமுபனோ, ஹிர்வா, இகிஷா, இசிம்பி, முஹோசா, க்விடோண்டா, சபினியோ, சூசா, பப்லோ, குர்யாமா, மாஃபுன்சோ, குரேபா, முசிரிகாலி மற்றும் என்டம்பாரா ஆகிய குழுக்களைச் சேர்ந்த கொரில்லாக் குட்டிகளுக்கே பெயர் சூட்டப்பட்டன. இதில், பப்லோ குழுவின் கொரில்லாக் குட்டிக்கு, “கிரா” என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பெயர், ஒட்டாரா குணவர்ததனவின் மகனான கிரண் எனும் பெயரிலிருந்து பெறப்பட்டுள்ளது. இதற்கு, ருவாண்டா மொழியின் படி, “ உங்களை ஆசிர்வதிக்கிறேன்” என்று அர்த்தமாகும்.

இந்த பெயர் சூட்டும் விழாக்கள் உள்ளிட்ட கொரில்லாக்களை பாதுகாப்பதற்கான செயற்றிட்டங்களின் மூலம், 2010ஆம் ஆண்டு 480 ஆக இருந்த கொரில்லாக்களின் எண்ணிக்கை, 2016ஆம் ஆண்டில், 604ஆக அதிகரித்துள்ளது. 1981ஆம் ஆண்டு, இந்த கொரில்லாக்களின் எண்ணிக்கை 242ஆக மாத்திரமே இருந்தது.

இந்த 25 கொரில்லா குட்டிகளின் பெயர் சூட்டு விழா, தங்களது கொரில்லா பாதுகாப்பு செயற்பாடுகளுக்கான வெற்றியைப் பிரதிபலிப்பதாகவும் உலகெங்கிலும் உள்ள விலங்கினப் பாதுகாப்பாளர்கள் தங்களுக்கு வழங்கியுள்ள ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ருவாண்டா மேம்பாட்டு வாரியத்தின் தலைமை சுற்றுலா அதிகாரி பொலிஸ்கரிசா தெரிவித்தார்.

மலை கொரில்லாக்கள், ஒரு அருகிவரும் உயிரினமாக இருக்கும்போது, அவற்றின் நீண்டகால வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கு, அதிகமான செயற்பாடுகள் தேவைப்படுவதாகவும் தங்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிகளின் மூலம், 2010ஆம் ஆண்​டிலிருந்து இன்று வரை 23 சதவீதத்தால்,  கொரில்லாக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தனித்துவமான மலை கொரில்லாக்களை, 2006ஆம் ஆண்டு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், அருகிவரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளடக்கியது. இவை, ஆப்பிரிக்காவிலுள்ள தேசிய பூங்காக்களில் மாத்திரமே காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X