2020 ஓகஸ்ட் 13, வியாழக்கிழமை

உலகக் கிண்ணம்: பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2019 மே 17 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது, இங்கிலாந்தில் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், உலகக் கிண்ணத் தொடரில் 12ஆவது முறையாக களமிறங்கவுள்ள பாகிஸ்தானை இப்பத்தி நோக்குகிறது.

உலகக் கிண்ணத் தொடர்களைப் பொறுத்தவரையில், 1992ஆம் ஆண்டு சம்பியனானதுடன், 1999ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கும், 2011, 1979, 1983, 1987ஆம் ஆண்டுகளில் அரையிறுதிப் போட்டி வரை வந்து வெற்றிகரமான அணியொன்றாக பாகிஸ்தான் காணப்படுகின்றபோதும், இந்த உலகக் கிண்ணத் தொடரைப் பொறுத்தவரை இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்று கவர்ச்சிகரமானதாக பாகிஸ்தான் தோற்றவில்லை.

எவ்வாறெனினும், இம்முறை உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும் இங்கிலாந்தில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இடம்பெறுவதற்கு முன்பாகவும் பாகிஸ்தானைப் பற்றி இதேபோன்றதொரு கருத்துருவாக்கமே இருந்தபோதும், அத்தொடரில் அனைவரது எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கி, இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சம்பியனாகியிருந்தது.

குறித்த தொடரில் பாகிஸ்தானின் நாயகர்களாகக் காணப்பட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் மொஹமட் ஆமிர், ஹஸன் அலி, ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ஃபக்கர் ஸமன் ஆகியோரில் இந்த உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் ஹஸன் அலி, ஃபக்கர் ஸமன் ஆகியோர் இடம்பெற்றிருப்பது பாகிஸ்தானுக்கு நம்பிக்கையளிக்கும் விடயமாகும்.

உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில், அண்மைய கால மோசமான பெறுபேறுகள் காரணமாக இடம்பெற்றிருக்காத மொஹமட் ஆமிர், தற்போது இடம்பெற்றுவரும் இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்தார். இத்தொடரில் சிறப்பாக செயற்படுவதன் மூலம் உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் மொஹமட் ஆமிர் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டபோதும், அவர் தற்போது சின்னம்மையால் பாதிக்கப்பட்டுளோளதாகச் சந்தேகிக்கப்படுகையில் உலகக் கிண்ணக் குழாமில் இனி அவர் இடம்பெறுவது சந்தேகமே ஆகும்.

மொஹமட் ஆமிரின் நிலை இவ்வாறாக இருக்கின்ற நிலையில், பாகிஸ்தானுக்கு சந்தோஷத்தையளிக்கும் செய்தியாக தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவ்வணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷடாப் கான், அதிலிருந்து தேறி பாகிஸ்தான் குழாமுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.

அந்தவகையில், மொஹமட் ஆமிர் இல்லாவிட்டாலும், ஹஸன் அலி, ஷடாப் கான், இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடி ஆகியோருடன் சகலதுறைவீரர்களான இமாட் வசீம், ஃபாஹீம் அஷ்ரப் என பாகிஸ்தானின் பந்துவீச்சுவரிசை ஓரளவு பலமானதாகவே காணப்படுகின்றது.

தட்டையான துடுப்பாட்டவீரர்களுக்குச் சாதகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் உலகக் கிண்ணத் தொடருக்கான ஆடுகளங்களில் எதிரணியை குறித்த பந்துவீச்சாளர்கள் எவ்வாறு கட்டுப்படுத்துகின்றார்கள் என்பதிலேயே பாகிஸ்தானின் வெற்றி தங்கியிருக்கின்றது.

இதேவேளை, துடுப்பாட்டப் பக்கம் நோக்கும்போது பாகிஸ்தானுக்கு வேகமான ஆரம்பத்தை வழங்கக்க்கூடியவராக ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஃபக்கர் ஸமன் காணப்படுகின்ற நிலையில் அவரிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறு எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், ஃபக்கர் ஸமனின் ஆரம்பத் துடுப்பாட்ட இணையான இமாம்-உல்-ஹக், தொடர்ந்து களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படும் பாபர் அஸாம், ஹரீஸ் சொஹைல், சஃப்ராஸ் அஹமட், ஹரீஸ் சொஹைல், ஷொய்ப் மலிக், மொஹமட் ஹபீஸ் என்போர் இனிங்ஸை கட்டமைத்து அதன் பின்னரே வேகமாகத் துடுப்பெடுத்தாடக்கூடியவர்கள் என்பதாலேயே ஃபக்கர் ஸமனிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறு எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, தமது இனிங்ஸின் இறுதிப் பகுதிகளில் இமாட் வசீம், ஃபாஹீம் அஷ்ரப், ஷடாப் கான், ஹஸன் அலி போன்றோரிடமிருந்தும் தாம் தற்கால ஒழுங்கிலான உயர் ஓட்ட எண்ணிக்கையை அடைவதற்கு அதிரடியான துடுப்பாட்டத்தை பாகிஸ்தான் எதிர்பார்த்து நிற்கிறது.

இதேவேளை, உலகக் கிண்ண ஆடுகளங்களில் பந்து தற்செயலாக ஸ்விங் ஆகும் பட்சத்தில் பாபர் அஸாம் அல்லது ஹரீஸ் சொஹைல் இனிங்ஸ் முழுவதும் துடுப்பெடுத்தாட வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. ஏனெனில், இவர்களினது விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டால் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்கும் அபாயத்தை பாகிஸ்தான் கொண்டுள்ளது.

இந்நிலையில், துடுப்பாட்டம், பந்துவீச்சு, இன்ன பிற காரணிகள் தவிர பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு பகுதியாக களத்தடுப்பு காணப்படுகின்றது. ஏனெனில், பதற்றத்தால் இலகுவான பல பிடியெடுப்புகளைத் தவறவிட்டு, போட்டிகளை வெல்வதற்கான பல வாய்ப்புகளை பாகிஸ்தான் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இதுதவிர, சம்பியன்ஸ் லீக் தொடரில் சம்பியனானபோது பாகிஸ்தானுக்கு சஃப்ராஸ் அஹமட் தலைமை தாங்கியிருந்தபோதும் எளிதில் உணர்ச்சிவசப்பட அல்லது கோபப்படக்கூடியவராக சஃப்ராஸ் அஹமட் காணப்படுகின்றார். ஏனெனில், கடந்த காலங்களில் வீரர்கள் தவறிழைக்கும் பட்சத்தில் அவர்களை நோக்கி சஃப்ராஸ் அஹமட் பாய்ந்த சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

ஆகவே, முன்னைய காலங்களில் அணிக்குள்ளான முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட அணியென்ற பாகிஸ்தானை சிறப்பாக முன்னெடுத்துக் கொண்டு செல்வதற்கு, எந்தவோர் விடயத்தையும் ஆராய்ந்து நிதானமாக குறிப்பாக இளம்வீரர்களிடன் சஃப்ராஸ் அஹமட் செயற்படுவதன் மூலமே அவர்களிடமிருந்து உச்சட்டக்கட்ட திறமை வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ள முடியும். இல்லாவிடில் அவர்களுக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்படுவதற்கான பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

நொட்டிங்ஹாமில் இலங்கை நேரப்படி இம்மாதம் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியுடன் தமது உலகக் கிண்ணத் தொடரை பாகிஸ்தான் ஆரம்பிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--