2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

‘கதிர்காமத்தில் திருப்பதி கிளை இல்லை’

Kogilavani   / 2017 மே 24 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம் புனித பூமியின் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஒளடதப் பூங்காவில், சுத்திரிகரிக்கப்பட்ட 30 ஏக்கரில், இந்தியாவின் திருப்பதி கோவிலின் கிளையொன்றை நிர்மாணிப்பதற்கான எவ்விதத் திட்டமும் இல்லையென, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்தது.  

நாடாளுமன்றத்தில்நேற்று (23)இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, உதய கம்மன்பில எம்.பி, ​மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரிடம்​ கேட்டிருந்த கேள்விகளுக்கான பதில், மன்றில் ஆற்றுப்படுத்தப்பட்டது. அந்த பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  

“கதிர்காமம் புனித நகரத்தின் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஒளடதப் பூங்காவில், சுமார் 30 ஏக்கர் காணி, இராணுவத்தை ஈடுபடுத்தி மூலிகைச் செடிகள் அழிக்கப்பட்டு பௌத்த பிக்குகள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2016 ஜூலை மாதம் துப்புரவு செய்யப்பட்டுள்ளதா?” என, உதய கம்மன்பில எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.   இதேவேளை, “சுத்தப்படுத்தப்பட்ட 30 ஏக்கர் நிலப்பரப்பில், இந்தியாவின் திருப்பதி கோவிலின் கிளையொன்றை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதா?” எனவும் கேட்டிருந்தார்.   

அக்கேள்விகளுக்காக பதிலில்,”அவ்வாறு எந்தவிதத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டில்லை. குப்பை கொட்டுவதற்காகவும், கதிர்காமத் தேவாலயத்தில் உள்ள யானைகளுக்கு உணவளிப்பதற்காக தென்னை தோப்பொன்று அமைப்பதற்காகவுமே மேற்படி இடம் சுத்தப்படுத்தப்பட்டதாக, கதிர்காம பஸ்நாயக நிலமே வாக்கமூலம் அளித்துள்ளார்.   

இந்தியாவின் திருப்பதி கோவிலின் கிளையொன்றை நிர்மாணிப்பது சம்பந்தமாக தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களத்துக்கு எந்தவித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை” என்றும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X