2021 ஜனவரி 20, புதன்கிழமை

‘ஆமியின் துப்பாக்கியாலேயே சுடப்பட்டுள்ளது’

Thipaan   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

ரவிராஜ் எம்.பியின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, இராணுவத்தினருக்குச் சொந்தமானது என, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கையிலிருந்து தமக்குத் தெரிய வந்ததாக, 55ஆவது சாட்சியாளரும் குற்றப் புலனாய்விப் பிரிவின் உப பரிசோதகருமான பிரேமதிலக அமரவன்ச, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (20) சாட்சியமளித்தார்.  

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரியவின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு அவர் சாட்சியமளித்தார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியாக இருந்த நடராஜா ரவிராஜ், 2006.11.10அன்று படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் நேற்றைய அமர்வு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய விசேட ஜூரி சபை முன்னிலையில், முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. 62, 64, 55ஆம் இலக்க சாட்சியாளர்கள், மன்றில் ஆஜராகியிருந்தனர்.  

62 ஆவது சாட்சியாளரான கடற்படை அத்தியட்சகர், கடற்படை சார்பில் ஆஜராகியிருந்ததுடன், கடற்படை ஆவணம் ஒன்றை மன்றுக்குக் கொண்டுவந்திருந்தார். இதன்போது, ஏனைய சாட்சியாளர்கள் இருவரும், மன்றுக்கு வெளியே அனுப்பப்பட்டனர்.  

சாட்சியாளர் கூண்டில் அவர் ஏறிய பின்னர், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.  

கே: குறித்த ஆவணத்துடன் சம்பந்தப்பட்டவரின் பெயர் என்ன?   

எச்.எம்.பி.சி.கே. ஹெட்டியாராச்சி.  

கே: அந்த ஆவணத்தை ஒப்படைத்தது யார்?  

லெப்டினன் ஹெட்டியாராச்சி.  

கே: அந்த ஆவணத்தை எங்கு அனுப்பியுள்ளார்?  

கடற்படைத் தலைமையகத்துக்கு.  

கே: இந்த ஆவணத்தின் படி, அரச புலனாய்வு சேவையில் இணைய வழங்கப்பட்டுள்ளதா?  

ஆம்.  

கே: அரச புலனாய்வு சேவையில் எத்தனையாம் ஆண்டு இணைக்கப்பட்டுள்ளார்?  

2006.10.23 (அந்த ஆவணத்தில் தகவல்கள் உள்ளதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, மன்றுக்கு அறிவித்தார்)  

தனது கேள்விகள் முடிந்ததாக அவர் அறிவித்ததையடுத்து, 2ஆவது சந்தேக நபர் சார்பில், ரசிக்க பாலசூரியவுக்குப் பதிலாக ஆஜரான சட்டத்தரணி யுரான் லியனகே, குறுக்குக் கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்கையில், சந்தேகநபர்களில் ஒருவர் சார்பில் ஆஜரானவரிடம் குறுக்குக் கேள்விகளைக் கேட்கமுடியாது என, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.  

3,4 ஆவது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்தன, 62 ஆவது சாட்சியாளர் எனக் குறிப்பிட்டு சத்தியப் பிரமாணம் செய்த பின்னர், அவரிடம் குறுக்குக் கேள்விகளைக் கேட்பதற்கு சட்டத்தில் இடமுள்ளதாகவும் தெரிவித்ததுடன், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கேள்விகளைக் கேட்டுள்ளதால் குறுக்குக் கேள்விகளைக் கேட்கமுடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.  

அதனையடுத்து, குறுக்குக் கேள்விகளைக் கேட்பதற்கு நீதிபதி அனுமதியளித்ததையடுத்து, 2ஆவது சந்தேக நபர் சார்பில், ரசிக்க பாலசூரியவுக்குப் பதிலாக ஆஜரான சட்டத்தரணி யுரான் லியனகே, கேள்விகளை கேட்டார்.  

கே: இந்த ஆவணத்தில் வலது மேல் மூலையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி என்ன?   

இலங்கை கடற்படைத் தலைமையகம், கொழும்பு.  

கே: அந்த ஆவணத்திலுள்ள பிரிவு 2இன் படி, கடற்படைத் தலைமையத்திலிருந்து இணைந்தது எப்போது?  

2006.10.23 அன்று.  

3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன மற்றும் ஜூரிகள் ஆகியோர் குறுக்குக் கேள்விகள் இல்லை என அறிவித்ததையடுத்து, 64 ஆவது சாட்சியாளரும் பொலிஸ் திணைக்களத்தின் தனிநபர்கள் மற்றும் ஆவணங்கள் பிரிவின் உப பரிசோதகரான சுனில் நாணயக்கார சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார்.  

கே: நீங்கள் எங்கே பணி புரிகிறீர்கள்?  

பொலிஸ் திணைக்களத்தின் தனிநபர்கள் மற்றும் ஆவணங்கள் பிரிவில்.  

கே: அதில் டுஸைன் என்பவர் பற்றிய தகவல் உள்ளதா, அவருடைய முழுப்பெயர்?  

பபியன் ரொய்ஸ்டன் டுஸைன்.  

கே: அவர் பொலிஸ் திணைக்களத்தில் இணைந்தது எப்போது?  

1992.11.22.  

கே: அந்தத் திணைக்களத்திலிருந்து நீக்கப்பட்டது?  

2013.08.11அன்று பதவிநீக்கப்பட்டுள்ளார்.  

கே: 2006ஆம் ஆண்டு, அவர் என்ன பிரிவில் இருந்தார்?  

அரச புலனாய்வு சேவையில்.  

கே: அரச புலனாய்வு சேவையில் எவ்வளவு காலம் பணியாற்றினார்?  

2005ஆம் ஆண்டு தொடக்கம் 2010.4.31 வரை.  

கே: பிருதிவிராஜ் மனம்பேரி என்பவரின் முழுப்பெயர்?  

விஜயவிக்கிரம மனம்பேரிகே சம்பத் பிருதிவிராஜ்.  

கே: அவரின் பதவி நிலை என்ன?   

பொலிஸ் கான்ஸ்டபிள்.  

கே: எவ்வளவு காலம் சேவையாற்றினார்?  

1996.01.09 தொடக்கம் 2009.09.15 வரை.  

கே: 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் எங்கு பணியாற்றினார்?   

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில்.  

பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கேள்விகள் முடிந்ததன் பின்னர், 2ஆவது சந்தேக நபர் சார்பில், ரசிக்க பாலசூரியவுக்குப் பதிலாக ஆஜரான சட்டத்தரணி யுரான் லியனகே, கேள்விகள் இல்லை எனத் தெரிவித்தையடுத்து, 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, குறுக்குக் கேள்விகளை ஆரம்பித்தார்.  

கே: 2009.09.15 அன்று பிருதிவிராஜ், இராஜினாமா செய்தாரா அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாரா?   

பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  

கே: 2007.07.02 பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், அதற்கான காரணம்?  

பதிவுப் புத்தகத்தில் இல்லை. (இதனையடுத்து, நீதிபதியின் அனுமதியுடன் சாட்சியாளர் கூண்டுக்கு அருகில் சென்ற சட்டத்தரணி அனுஜ, பதிவுப் புத்தகத்தை ஒவ்வொரு பக்கங்களாகப் புரட்டிப் பார்தபோதும், அது இடம்பெற்றிருக்கவில்லை.  

கே: லியனாராச்சிகே அபேரத்ன என்பர் ஏன் விலக்கப்பட்டார் எனக் கூற முடியுமா?  

(இதன் போது எழுந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மேற்குறித்த இருவர் தொடர்பில் கேட்பதற்கே அவர் தயாராகி வந்தாகத் தெரிவித்தார்)  

கே: டுஸைன், பிருதிவிராஜ் தவிர, லியனாராச்சிகே அபேரத்னவின் தகவல்கள் இல்லையா?  

இல்லை.  

இதனையடுத்து, ஜூரிகளிடம் கேள்விகள் உள்ளனவா எனக் கேட்கப்பட்டதற்கு, இல்லை என அவர்கள் பதிலளித்தனர்.  

பின்னர், 55ஆவது சாட்சியாளரான, குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பரிசோதகர் பிரேமதிலக அபேரத்ன மன்றுக்கு அழைக்கப்பட்டார். அவரிடம், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.  

கே: எத்தனை வருடங்களாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றுகிறீர்கள்?  

16 வருடங்கள்.  

கே: ரவிராஜ் எம்.பியின் படுகொலை தொடர்பில் வாக்குமூலங்கள் பெற்றீர்களா?   

ஆம்.  

கே: முதலாவது வாக்குமூலத்தை யாரிடம் பெற்றீர்கள்?  

ராஜபக்ஷகே ஷிரோமி  

கே:எப்போது?   

2006.11.10  

கே: அதையடுத்து, 2015ஆம் ஆண்டு யாரிடம்?  

சிலரிடம்.  

கே: வாக்குமூலம் பெற்றவர்களின் பெயர்களைக் கூற முடியுமா?   

திலின நிஷாந்த நாமல், லியனகே, காமினி பிரேமரத்ன, சசிகலா ரவிராஜ், கருப்பையா கல்பனா, காமினி, முனியாண்டி கிருஸ்ணசாமி, சாந்தினி முருகன், கிராம சேவகர் காமினி பண்டார, மொஹமட் யூசுப் மொஹமட் ரிப்தி.  

கே: இவர்கள் தவிர, குற்றப் புலனாய்வுப் பிரிவில் 2015ஆம் ஆண்டு வேறுயாரிடம் வாக்குமூலம் பெற்றீர்கள்?   

பிருதிவிராஜ்.  

கே: ஜோசப் அஞ்சலோ ரோய், அசரப்புலிகே நிசங்க ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றது எப்போது?   

2006.11.10  

கே: சம்பவம் நடந்த அன்றா?   

ஆம்.  

2015ஆம் ஆண்டு வாக்குமூலத்தின் பின்னர் இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர்கள், எஸ்.பி ஜே.ஈ 6505 என்ற மோட்டார் சைக்கிள் இலக்கம் தொடர்பில் தெரிவித்தாகவும் கூறிய சாட்சியாளர், அது, நீல நிற ரிவிஎஸ் ரக மோட்டார் சைக்கிள் எனவும் தெரிவித்தார்.   

படுகொலையுடன் தொடர்புடை மோட்டார் சைக்கிளுக்கு மேற்குறித்த இலக்கமே பொறிக்கப்பட்டிருந்துள்ளதுடன், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த மோட்டார் சைக்கிள தங்காலை பகுதியைச் சேர்ந்த ஒருவருடைய் எனத் தெரியவந்துள்ளது.  

இந்த மோட்டார் சைக்கிள், பொலன்னறுவை வெலிகந்தை பகுதியில் கருணா அணியினரால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

2008.01.16அன்று, கொழும்பு பிரதான நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வழக்குப் பொருட்கள், ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கூறினார்.  

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 60 பேரிடம் வாக்குமூலம் பதியப்பட்டதாகவும் 2015.03.15அன்று, 2,3,4ஆம் பிரதிவாதிகளான பிரசாத் ஹெட்டியாராச்சி, காமினி செனவிரத்ன ஆகியோரும் 2015.10.29அன்று, பிரதீப் சாமிந்தவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

2015.02.26அன்று, மனம்பேரிகே சம்பத் பிருதிவிராஜ் கைதுசெய்யப்பட்டார். அதன்பின்னர், 2015.05.21, 2015.05.22, 2015.03.20, 2015,03.23, 2015.08.26, 2016.06.02ஆகிய தினங்களில் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் முன்னைய வாக்குமூலத்தைத் தெளிவுபடுத்தவே ஏனையவை பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.  

அதன்பின்னர், தன்னை விடுவிப்பதற்கான நிபந்தனையுடன், தான் அரச தரப்புச் சாட்சியாளராக மாறுவதற்குதத் தயாராக உள்ளதாகத் தெரிவித்ததையடுத்து, அவர் அரச தரப்பு சாட்சியாளரானார்.  

சாமி என்கிற பழனிச்சாமி சுரேஷ், சரண் என்று அழைக்கப்படும் விவேகானந்தன் சிவகாந்தன் ஆகியோரைக் கைதுசெய்ய கொட்டாஞ்சேனை, மோதர பகுதிகளுக்குச் சென்றபோதும் அவர்களைக் கைதுசெய்ய முடியவில்லை எனவும் சரண், மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.  

கைரேகை நிபுணர்களால், ரி 56 ரகத் துப்பாக்கி பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், 2015.03.27அன்று, பெரஹரா மாவத்தையிலுள்ள 35ஏ கட்டத்துக்குச் சென்றதாகவும் கூறினார்.  

சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கியை பரிசோதித்த அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தினர், அது இராணுவத்துக்குச் (ஆமிக்கு) சொந்தமானது எனத் தெரிவித்தாகவும் சம்மி குமாரரத்ன, லியனகே ஆகியோர் இவ்விவகாரத்துடன் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

207-6535 என்ற இலக்கமுடைய முச்சக்கர வண்டிதொடர்பில் விசாரித்த போது, அரச புலனாய்வு சேவையில் பணியாற்றும் லக்நாத் என்பவரின் தந்தைக்குச் சொந்தமானது எனவும் அவர்கள் இருவரும் பொலன்னறுவையைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறினார். மரண விசாரணை, நீதவான் முன்னிலையில் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.  

கேள்விகள் முடிவடைந்ததன் பின்னர், 2ஆவது பிரதிவாதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, 3,4ஆவது பிரதிவாதிகள் சார்பான சட்டத்தரணி கேள்விகளைக் கேட்டபின்னர் தான் கேட்பதாக அறிவித்ததையடுத்து. 3,4ஆவது பிரதிவாதிகள் சார்பான சட்டத்தரணி அனுஜ கேள்விகளைக் கேட்கத் தொங்கினார்.  

கே:குற்றப் புலனாய்வுப் பிரிவில் எத்தனை வருடங்களாகப் பணியாற்றுகிறீர்கள்?  

19 வருடங்களாக.  

கே:குற்றப் புலனாய்வுப் பிரிவில் மாத்திரம் எத்தனை ஆண்டுகள்?   

16 ஆண்டுகள்.  

கே: இந்த வழக்கில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தவிர, வேறு நாட்டின் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கடமை புரிந்தீர்களா?   

ஆம்.  

கே: அதன் போது, வழக்குப் பொருட்கள் நான்கை, கறுப்புப் பையுடன் அனுப்பினீர்களா?  

ஆம்.  

கே: மரபணுப் பரிசோதனை தொடர்பான அறிக்கைகள் உலகத்தில் முக்கியமான சாட்சியாக எடுக்கப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?  

ஆம்.  

கே: உங்களுடை பி அறிக்கை, மரபணுப் பரிசோதனை தொடர்பான அறிக்கை,  

( கேள்வி கேட்கத் தொடங்கிய போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கிட்டு, தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். அதுதொடர்பில் கேட்கலாம் என நீதிபதி அறிவித்தார்.)  

கே: 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பி அறிக்கையின் 633ஆம் பக்கத்தில் உங்களுடை கையெழுத்து இடப்பட்டுள்ளது?   

(தனது புத்தகத்தில் கையெழுத்தை தேட முயன்றபோது, புத்தகத்தைக் கொண்டு சென்ற சட்டத்தரணி அனுஜ, குறித்த இடத்தைச் சுட்டிக்காட்டினார்) எனது கையெழுத்துத் தான்.  

கே: கறுப்புப் பையிலிருந்து இரத்தமாதிரி எடுக்கப்பட்டுள்ளது?  

ஆம்.  

கே:அந்தப் பையில் இருந்து பெறப்பட்ட இரத்த மாதிரியைப் பரிசோதித்த பின்னர், பொருட்களைத் திரும்பப் பெறுமாறு ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸ் தகவல் வழங்கியுள்ளது, பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது?   

ஆம்.  

கே: பிரதிவாதிகளைக் கைதுசெய்தபின்னர், அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்தமாதிரி, ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸினால் வழங்கப்பட்டதுடன் பொருந்தவில்லை?  

ஆம்.  

கே: 2015.4.4அன்று பிரதிவாதிகள் நால்வரிடமுமிருந்து இரத்த மாதிரிகளைப் பெற அனுமதி கோரியுள்ளீர்கள்?  

ஆம்.  

கே: ஜின்டெக் நிறுவனத்தினூடாக, பிரதிவாதிகளிடமிருந்து இரத்தமாதிரி பெறப்பட்டுள்ளது?  

ஆம்.  

கே: ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸுக்கு பிரதிவாதிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை அனுப்பப்பட்டதா?   

ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாரின் அறிக்கையையும் ஜின்டெக்கு அனுப்பி, பிரதிவாதிகளின் இரத்த மாதிரியுடன் ஒப்பிட முயன்றோம். எனினும், தங்களுடைய அறிக்கையைக் கொண்டு தீர்ப்பு வழங்குவதாயின் மரண தண்டனை வழங்கக் கூடாது என ஸ்கொட்லாண் யார்ட் பொலிஸார் கோரியதற்கு இணங்க, அது தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் அறிவித்தோம்.  

கே: ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாரின் அறிக்கையைப் பெறுவது தொடர்பில் அவர்களுக்கு அறிவித்தீர்களா?  

ஆம், அந்த அறிக்கை அனுப்புமாறு கோரினோம் (பதிவுப் புத்தகத்தில் தேடியபின்னர், மின்னஞ்சல் முகவரியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.)  

2,3ஆம் சாட்சியாளர்களான அமில சிந்தக ரணசிங்க, திலின நிஷாந்த நாமல் ஆகியோரிடம் தலா 5 வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அவர்களிடம் இந்த நீதிமன்றத்தில் சாட்சியம் பதிவுசெய்யப்படவில்லை. அதேபோன்று, பிரதிவாதிகளின் அடையாள அணிவகுப்பின் போதும் அவர்கள் ஆஜர்படுத்தப்படவில்லை என, கூறினார். அதற்கு ஆம் எனப் பதிலளித்தார்.  

அதனையடுத்து, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கேள்விகளை கேட்டார்.  

கே:ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாரின் விடயம் தொடர்பில் பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா?   

ஆம்.  

கே: குற்றப் புலனாய்வு பிரிவு, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அறிவித்ததாகக் கூறினீர்கள், காரணம் என்ன?  

இலங்கையைப் பொறுத்தவரை பாரிய குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்ற நிலையில், தமது அறிக்கையைப் பயன்படுத்தித் தீர்ப்பு வழங்கினால், மரண தண்டனை வழங்கக் கூடாது என, ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார் கோரியிருந்தனர். இதையே சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்தோம்.  

பின்னர், ஜூரிகள் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.  

கே:சரணைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?  

அவர் தொடர்பான தகவல்களை சர்வதேசப் பொலிஸாருக்கு வழங்கியுள்ளோம். அவர்களும் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர்.  

ஜூரிகளின் கேள்விகளையடுத்து, வழக்கு விசாரணையை இன்றைய தினத்துக்கு, நீதிபதி ஒத்திவைத்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .