2021 மே 18, செவ்வாய்க்கிழமை

2 மகள்கள் வன்புணர்வு : 2 தந்தைகளுக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2017 ஜூன் 06 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுடைய மகள்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய, தந்தையர் இருவர், வெவ்வேறு நீதிமன்றங்களின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

இவ்விரு சம்பவங்களில் ஒன்று கொழும்பிலும் மற்றைய சம்பவம் அநுராதபுரம் எப்பாவெல பிரதேசத்திலும் இடம்பெற்றுள்ளன. குறித்த தந்தையர்களில் ஒருவர் விரிவுரையாளர் என்றும் மற்றையவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டவர் என்றும் அறியமுடிகின்றது.  

கொழும்பைச் சேர்ந்த சந்தேகநபரான அந்த தந்தை, தன்னுடைய எட்டு வயது மகளையும், எப்பாவெலயைச் சேர்ந்த அந்தத் தந்தை தன்னுடைய 16 வயதான மூத்த மகளையுமே, இவ்வாறு அச்சுறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.   

கொழும்பில்...  

தனது எட்டு வயதான மகளை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

சந்தேகநபரான அந்தப் பேராசிரியர் கடந்த வெள்ளிக்கிழமை (02) பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அவரை, அளுத்கடை இல-2 நீதிமன்றத்தில், அன்றையதினம் இரவே ஆஜர்படுத்திய போதே, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.   
43 வயதான சந்தேகநபர், பொரளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் கொழும்பை அண்மித்த பல்கலைக்கழகமொன்றின் பேராசிரியர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேகநபர், தன்னை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளதாக, பாதிக்கப்பட்ட மகள், தன்னுடைய அம்மாவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.   
இந்த விவகாரம் தொடர்பில், அந்த பிள்ளையின் தாய், பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.  

அதனையடுத்தே, பொலிஸார் குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

தம்புத்தேகம...  

தன்னுடை 16 வயதுடைய மூத்த மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தையை (41 வயது), எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தம்புத்தேகம நீதவான் சஞ்ஜீவணி ரத்நாயக்க, நேற்று (05) உத்தரவிட்டார்.   

அநுராதபுரம், எப்பாவெல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் ஒரு வேலை நிமித்தம் வீட்டிலிருந்து தாயார் வெளியில் சென்ற சந்தர்ப்பத்தில், தந்தையால் குறித்த சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளானெரவும் பொலிஸார் தெரிவித்தனர்.   

நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறக் கூடாது எனவும் இல்லாவிடின் கொலை செய்து விடுவதாகவும் தந்தை, மகளை அச்சுறுத்தியுள்ளார்.   

எனினும், இவ்விடயம் குறித்து மகள் தாயாரிடம் தெரிவித்ததுக்கமைய, எப்பாவெல பொலிஸ் நிலையத்தில், தாயார் முறையிட்டுள்ளார்.   

16 வயதுடைய தனது மூத்த மகளை, தனது கணவர் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக, இரு பிள்ளைகளின் தாயாரினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, எப்பாவெல பொலிஸார் தெரிவித்தனர்.   

முறைப்பாட்டின் அடிப்படையில், கட்டுமானத் தொழில் புரியும் குறித்த தந்தை, கடந்த 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.   

தாயின் பாதுகாப்பின் கீழ், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக சிறுமியை அனுமதிக்குமாறும் தம்புத்தேகம நீதவான் உத்தரவிட்டார்.   
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, எப்பாவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .