2021 மே 15, சனிக்கிழமை

பண மோசடி: ஒருவர் கைது

Kogilavani   / 2015 நவம்பர் 23 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 41 வயது மதிக்கத்தக்க நபரொருவரை, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான், ஞாயிற்றுக்கிழமை (22) உத்தரவிட்டார். .

இது தொடர்பாக தெரியவருவதாவது,

நுவரெலியா, மீப்பிலிமான பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த நபர் ஒருவர், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணத்தை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு, தலைமறைவாகியுள்ளார் என பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில்  10 முறைப்பாடுகளும் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் 19 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எட்மன் ஏமச்சந்திரவின் பணிப்புரைக்கமைய, பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.விமலதாச நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேனக ஜயசிங்க, இன்ஸ்பெக்டர் நிசாந்த பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மஹியங்கனை அசலக பகுதியில் வைத்து குறித்த நபரை, நுவரெலியா பொலிஸார் சனிக்கிழமை (21) கைது செய்திருந்தனர்.
மேற்படி நபர் ரொசான் சஞ்சீவ பெத்தேவல அல்லது நொயல் பெத்தேவல என இனம் காணப்பட்டுள்ளார்.

இவர், மொரட்டுவை, கல்கிஸை, கந்தளாய் போன்ற பொலிஸ் நிலையங்களில் தேடப்பட்டு வந்தவர் எனவும் இவருக்கு எதிராக இப்பகுதிகளிலுள்ள நீதிமன்றங்களினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபரை, நீதவான் முன்னிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .