2021 மே 18, செவ்வாய்க்கிழமை

‘சிற்றூழியர் விவகாரத்தில் தெற்குக்கு முதலிடம்; வடக்கு புறக்கணிப்பு’

George   / 2017 ஜூன் 07 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடமாகாண அரச திணைக்களங்களில் காணப்படும் சிற்றூழியர் வெற்றிடங்களுக்குக்கூட தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனைத் தவிர்த்து, வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?” என, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராசா கேள்வியெழுப்பினார். 

நாடாளுமன்றில், நேற்றைய கேள்வி பதில் நேரத்தின்போது, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் அவர் இதனைக் கேட்டார். 

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச அலுவலகங்களில் காணப்படுகின்ற சாரதி, அலுவலகப் பணியாளர் வெற்றிடங்களுக்கு தென்பகுதியில் உள்ளவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், யுத்த சூழலிலும் கல்வி கற்று அப்பதவிகளுக்குத் தகுதியான நிலையில் உள்ள வட பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.  

வடபகுதியில் நியமனம் பெறும் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடங்களோ பணியாற்றி விட்டு, தமது சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுவிடுகின்றனர். 

இதனால், இப்பகுதியில் தொடர்ந்து வெற்றிடம் காணப்படுவதுடன், இங்குள்ளவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் கிடைக்கப்பெறாத நிலை காணப்படுகிறது. இதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா?” என  சாந்தி எம்.பி, தனது கேள்வியில் குறிப்பிட்டிருந்தார். 

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, “அரச சேவையில் நிலவும் சிறு தொழில் வெற்றிடங்களை நிரப்பும் பணி, ஆரம்பத்தில் பொது நிர்வாக அமைச்சினாலேயே முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய சிறு வெற்றிடங்களை நிரப்பும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. 

எனவே, சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான அநீதிகள் இடம்பெறுகின்றமையை நான் ஏற்றுக்கொள்கிறேன். இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிகமானவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கிறோம். 

எனினும், சிற்றூழியர் நியமனங்களில் அதிகமானவை மாகாண சபைகளின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரம் உள்ளது. 

கடந்த பொது நிர்வாக சேவைப் பரீட்சையில் 101 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அதில் 32 பேர், வடக்கு, கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள்” என்றார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .