2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

காலிறுதிப் போட்டியில் ஸ்பெய்ன், அவுஸ்திரேலியா

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்னின் தலைநகர் மட்ரிட்டில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டிகளின் காலிறுதிப் போட்டிக்கு கனடாவோடு, ஸ்பெய்ன் மற்றும் அவுஸ்திரேலியாவும் நேற்று தகுதிபெற்றுள்ளன.

குரோஷியாவின் நிக்கொலா மெக்டிச், பொர்னா கொஜோவுக்க்கெதிரான தனிநபர் போட்டிகளில் ஸ்பெய்னின் றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட், ரஃபேல் நடால் ஆகியோர் வென்று காலிறுதிப் போட்டிகளில் ஸ்பெய்னின் இடத்தை உறுதிப்படுத்தியிருந்தனர்.

6-1, 6-3 என்ற நேர் செட்களில் நிக்கொலா மெக்டிச்சை உலகின் ஒன்பதாம்நிலை வீரரான றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட் வென்றிருந்த நிலையில், 6-4, 6-3 என்ற நேர் செட்களில் பொர்னா கொஜோவை உலகின் முதல்நிலை வீரரான ரஃபேல் நடால் வென்றிருந்தார். பின்னர், இரட்டையர் போட்டிகளில் மார்செல் கிரனொலேர்ஸுடன் இணைந்து 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இவான் டொடிக், மட்ட்டே பவிச்சை வென்றிருந்தார்.

அந்தவகையில், 0-3 என ஸ்பெய்னிடம் வீழ்ந்த நடப்புச் சம்பியன்கள் குரோஷியா, தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதேவேளை, பெல்ஜியத்தின் ஸ்டீவ் டர்சிஸ், டேவிட் கொஃபினை தனிநபர் போட்டிகளில் வென்ற அவுஸ்திரேலியாவின் நிக் கிர்யோஜிஸ், அலெக்ஸ் டி மினோர் ஆகியோர் தமதணியின் காலிறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்திருந்தனர்.

6-2, 7-6 (10-8) என்ற நேர் செட்களில் ஸ்டீவ் டர்சிஸ்ஸை நிக் கிர்யோஜிஸ் வென்றிருந்ததுடன், 6-0, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் டேவிட் கொஃபினை அலெக்ஸ் டி மினோர் வென்றிருந்தார். இந்நிலையில், பெல்ஜியத்தின் சன்டர் கில்லே, ஜொரான் விலீகனுக்கெதிரான இரட்டையர் போட்டியை அவுஸ்திரேலியாவின் ஜோன் பீர்ஸ், ஜோர்டான் தொம்சன் கைவிட்டிருந்தனர்.

இந்நிலையில், நெதர்லாந்துடனான தமது ஆரம்ப குழுநிலைச் சுற்றில் 2-1 என பிரித்தானியா வென்றிருந்தது.

நெதர்லாந்தின் தலோன் கிறீக்ஸ்பூருடனான ஒற்றையர் போட்டியின் முதலாவது செட்டை 6-7 (7-9) என இழந்திருந்த உலகின் முன்னாள் முதல்நிலைவீரரான அன்டி மரே, இரண்டாவது செட்டை 6-4 என வென்றிருந்தபோதும், தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் 1-4 என பின்தங்கிக் காணப்பட்டிருந்தார். எனினும் மீண்டு வந்து 7-5 (7-5) என மூன்றாவது செட்டைக் கைப்பற்ற 1-0 என பிரித்தானியா முன்னிலை பெற்றது.

இந்நிலையில், நெதர்லாந்தின் றொபின் ஹாஸேக்கெதிரான தனிநபர் போட்டியில் பிரித்தானியாவின் டான் 6-3 என முதலாவது செட்டை வென்றபோதும், 6-7 (5-7), 4-6 என அடுத்த இரண்டு செட்களையும் இழக்க சுற்று 1-1 என சமநிலையானது.

எனினும் தீர்மானமிக்க இரட்டையர் போட்டியின் 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹொஃப், ஜூன்-ஜூலியன் றொஜரை பிரித்தானியாவின் ஜேமி மரே, நீல் ஸ்கூப்ஸ்கி வெல்ல சுற்றை 2-1 என பிரித்தானியா வென்றது.

இதேவேளை, ஜப்பானுடனான தமது ஆரம்ப குழு ஏ சுற்றில் 3-0 என சேர்பியா வென்றிருந்தது.

தனிநபர் போட்டிகளில், யுஷி சுகிட்டாவை 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஃபிலிப் கிரஜினோவிச் வென்றதுடன், யொஷிஹிட்டோ நிஷியோகாவை 6-1, 6-2 என்ற நேர் செட்களில் உலகின் இரண்டாம்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் வென்றிருந்ததுடன், இரட்டையர் போட்டிகளில் 7-6 (5), 7-6 (4) என்ற நேர் செட்களில் பென் மக்லச்சன், யசுடகா உஷியமாவை ஜன்கோ டிப்சரவிச், விக்டர் ட்ரோய்க்கி ஆகியோர் வென்றிருந்தனர்.

இதேவேளை, ஆர்ஜென்டீனாவுடனான தமது குழு சி சுற்றில் 3-0 என கேர்மனி வென்றிருந்தது.

குவைடோ பெல்லாவை 1-6, 6-3, 6-4 என பிலிப் கொஷ்னைடர் வென்றிருந்ததுடன், டியகோ ஸ்வார்ட்ஸ்மானை 6-3, 7-6 (10-8) என்ற நேர் செட்களில் ஜான்-லெனார்ட் ஸ்ரஃப் வென்றிருந்ததுடன், இரட்டையர் போட்டிகளில் 6-4 (4-7), 7-6 (7-2), 7-6 (20-18) என்ற செட் கணக்கில் மக்ஸிமோ கொன்ஸலேஸ், லியனார்டோ மயேயை கெவின் கிரவியட்ஸ், அன்ட்ரயாஸ் மைக்ஸ் வென்றிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .