2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

சமநிலையில் இன்டர் மிலன் – அத்லாண்டா போட்டி

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அத்லாண்டாவுடனான போட்டியை சமநிலையில் இன்டர் மிலன் முடித்துக் கொண்டது.

இப்போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே, சக முன்களவீரர் றொமேலு லுக்காக்குவிடமிருந்து பெற்ற பந்தை இன்டர் மிலனின் இன்னொரு முன்களவீரரான லொட்டரோ மார்ட்டின்ஸ் கோலாக்க ஆரம்பத்திலேயே இன்டர் மிலன் முன்னிலை பெற்றது.

எனினும், போட்டியின் இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய அத்லாண்டா, போட்டியின் 75ஆவது நிமிடத்தில் தமது மத்தியகளவீரர் றொபின் கொஸென்ஸ் பெற்ற கோலுடன் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டது.

இப்போட்டியின் இறுதியில், மாற்றுவீரராகக் களமிறங்கிய அத்லாண்டாவின் முன்களவீரர் லூயிஸ் முரியெல்லின் பெனால்டியைத் தடுத்த இன்டர் மிலனின் அணித்தலைவரும் கோல் காப்பாளருமான சமிர் ஹன்டனோவிச், அத்லாண்டாவின் வெற்றியையும் பறித்திருந்தார்.

இதேவேளை, இப்போட்டியின் முதற்பாதியில் லொட்டரோ மார்ட்டின்ஸின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை அத்லாண்டானின் பின்களவீரர் பெரற் டிஜிம்ஸ்டி தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற நாப்போலியுடனான போட்டியில், சிரோ இம்மொபைல் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றிருந்தது.

இதேவேளை, கைதரியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் வென்றது. ஏ.சி மிலன் சார்பாக, ரஃபேல் லியோ, ஸல்டான் இப்ராஹிமோவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .